3720.விண் தொடர் நெடு
     வரைத் தேனும், வேழத்தின்
வண்டு உளர் நறு
     மத மழையும் மண்டலால்,
உண்டவர் பெருங் களி
     உறலின், ஓதியர்
தொண்டைஅம் கனி இதழ்த்
     தோன்றல் சான்றது;

     விண்தொடர் நெடுவரை - விண்ணளாவிய பெரிய மலைகளிலிருந்து;
தேனும் - பெருகிவரும் தேனின் பெருக்கும்; வேழத்தின் - யானைகளின்;
வண்டு உளர்
- வண்டுகள் மொய்க்கும்; நறுமத மழையும் - மணமுடைய
மதநீர்ப்பெருக்கும்; மண்டலால் - (மிக்குவந்து) நிறைந்ததால்; உண்டவர் -
(பொய்கையின்) நீரைப்பருகியவர்கள்; பெருங்களி உறலின்- மிக்க களிப்பை
அடைவதால்; ஓதியர் - (அப்பொய்கை) கூந்தலழகுடைய மகளிரின்;
தொண்டை அம்கனி இதழ் -
கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகள்
போல; தோன்றல் சான்றது - தோன்றல் அமைந்தது.

     மலைத்தேனும் மதநீர்ப்பெருக்கும் பொய்கையில் வந்து கலந்துவிடுவதால்
அப்பொய்கைநீர் உண்டவர்க்குக் களிப்பைத் தந்தது.  அதனால்
உண்டவர்க்குக் (முத்தமிடுவார்க்குக்)களிப்பைத்தரும் மகளிர் இதழ்களை ஒத்து
விளங்கியது பொய்கை - உவமை; மகளிர் இதழ்க்குத் தொண்டைக்கனி
உவமை; எனவே உவமையணி. 'விண்தொடர் நெடுவரை'- உயர்வு நவிற்சி
அணியாகும்; வரை - இருமடி ஆகுபெயர்.                           12