3721. | ஆரியம் முதலிய பதினெண் பாடையில் பூரியர் ஒரு வழிப் புகுந்தது ஆம் என, ஓர்கில கிளவிகள் ஒன்றோடு ஒப்பு இல, சோர்வு இல, விளம்பு புள் துவன்றுகின்றது; |
ஆரியம் முதலிய - வடமொழி முதலான; பதினெண் பாடையில் - பதினெட்டு மொழிகளில்; பூரியர்- புலமை இல்லாத புல்லறிவாளர்; ஒருவழி- ஓரிடத்தில்; புகுந்தது ஆம் என - கூடி ஆரவாரிப்பது போல; ஓர்கில கிளவிகள் - (இன்ன பறவையின் குரல் என) ஆராய்ந்து அறிதற்கியலாத ஒலிகள்; ஒன்றோடு ஒப்பு இல- ஒன்றோடொன்று தொடர்பு இல்லாதவனாய்; சோர்வு இல விளம்பும் - ஓய்தலின்றி ஒலிக்கும்; புள் துவன்றுகின்றது - பறவைகள் நெருங்கியிருக்கப் பெற்றது. (அப்பொய்கை). ஆரியம் முதலிய மொழிகளில் புலமை இல்லாதவர்கள் ஓரிடத்திலிருந்து எவர்க்கும் புரியாத வகையில் ஆரவாரிப்பது போலப் பல்வேறு பறவைகள் பொய்கையில் ஒருங்கிருந்து பிரித்து உணர முடியாத வகையில் ஓய்வில்லாது ஒலித்தன; உவமை அணி; பல பறவைகளின் குரல் தெளிவாகப் பிரித்து அறிய முடியாது இருப்பதால், பலபகுதிகளிலிருந்து பல மொழி பேசுவோரின் ஆரவாரத்தை உவமையாக்கினார். ஆரியம் - வடமொழி; பாடை - பாஷா என்னும் வட சொல்லின் திரிபு; கிளவி - பேச்சு - ஒலி; விளம்புதல் - பேசுதல்- ஒலித்தல்; புள் - பறவை. பறவைகளின் ஒலிகளுக்கு மொழிகள் ஒலிகள்(சீவக 93) பூரியர் - தம்மைப் பெரியராய்க் கருதும் அற்பர். 'சிறுமை அணியுமாம் தன்னை வியந்து' என்பது குறள் (978) 13 |