3722. | தான் உயிர் உறத் தனி தழுவும் பேடையை, ஊன் உயிர் பிரிந்தென, பிரிந்த ஓதிமம், வான் அரமகளிர்தம் வயங்கு நூபுரத் தேன் உகு மழலையைச் செவியின் ஓர்ப்பது; |
தான் உயிர்உற - தன்னை உயிர்போல (நினைத்து); தனி தழுவும் பேடையை - சிறப்பாகத் தழுவிக் கொள்ளும் பெண் அன்னத்தை; ஊன் உயிர் பிரிந்தென- உடலிலிருந்து உயிர் பிரிந்தாற்போல; பிரிந்த ஓதிமம் - பிரிந்த ஆண் அன்னம்; வான் அரமகளிர்தம் - (நீராட வரும்) தேவ மகளிரின்; வயங்கு நூபுரம் - விளங்குகின்ற காற் சிலம்பணிகளின்; தேன் உகு மழலையை - தேன் போன்ற இனிய ஓசையை; செவியின் ஓர்ப்பது - (தன் பெடையின் குரல் என்று) செவி கொண்டு கூர்ந்து கேட்பதற்கு (அப்பொய்கை) இடமாயது. பெண் அன்னத்தைப் பிரிந்த சேவல் அன்னம் பொய்கையில் நீராடவரும் தெய்வமங்கையரின் சிலம்பொலியைத் தனது பெடையின் குரலென மயங்கிக் கேட்கும் என்பது கருத்து. மயக்க அணி. சீதையைப் பிரிந்த இராமனும் அவளை நினைவு படுத்தக்கூடிய குரலைக் கேட்கின் மயங்குவதை இக்காட்சி குறிப்பாக உணர்த்துகிறது. தான் என்றது சேவல் அன்னத்தினை; ஊன் - தசை - உடம்பிற்கு ஆகுபெயர்; நூபுரம் - சிலம்பு; மழலை - இனிய மெல்லோசை; ஓர்த்தல் - நுணித்தறிதல்; அன்பில் சிறந்தது அன்னப்பறவை 'ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்ன மொத்தும்' (சீவக. 189) என்ற அடிகளைக் காண்க. அன்னத்தின் ஒலிக்கு மகளிர் சிலம்பொலி உவமையாதல் 'அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று இரங்கு வார்புனல் சரயு' என முன்னரும் (335) கவிஞர் கூறியுள்ளார். 14 |