3723.ஈறு இடல் அரிய மால் வரை
     நின்று ஈர்த்து இழி
ஆறு இடு விரை அகில்
     ஆரம் ஆதிய
ஊறிட, ஒள் நகர்
     உரைத்த ஒண் தளச்
சேறு இடு பரணியின்
     திகழும் தேசது.

     ஈறு இடல் அரிய - (அப்பொய்கை) எல்லை கூற இயலாத; மால்வரை
நின்று -
பெரிய மலையிலிருந்து; ஈர்த்து இழி - இழுத்துக் கொண்டு
இறங்கிவரும்; ஆறு இடு - அருவிகள் இட்ட; விரை அகில் - மணம் மிக்க
அகில்; ஆரம் ஆதிய - சந்தனம் முதலிய (வாசனை மரங்கள்); ஊறிட -
(நீரில்) ஊறப்பெறுதலால்; ஒள்நகர் உரைத்த - செல்வம் மிக்க நகரமக்கள்
அரைத்த; ஒண்தளச்சேறு - ஒள்ளிய சந்தனக்குழம்பை; இடு பரணியின் -
இட்டு நிரப்பிய சந்தனக்கிண்ணம் போன்று; திகழும் தேசது - விளங்கும்
ஒளியுடையது.

     மலை அருவிகளால் கொண்டுவரப்பட்ட மரங்கள் தேய்ந்து ஊறியதால்
அப்பொய்கை கலவைச்சந்தனம் கூட்டி வைத்திருக்கும் கிண்ணத்தை ஒத்து
விளங்கியது; இஃது உவமை அணி. பொய்கைக்குப் பரணியும், அதிலுள்ள
மரங்களின் தேய்வையால் குழம்பிய நீர்க்குச் சந்தனக் குழம்பும் உவமைகளாம்.
நகரத்திற்கு உரிய சந்தனம் என்பதால் 'ஒள்நகர் உரைத்த' எனப்பட்டது.
செல்வமுடைய நகரமக்களே சந்தனம் முதலிய மணப்பொருள்களைக் கொண்டு
இன்பம் நுகர்வர்.

     பரணி - சந்தனக் கிண்ணம்; நகர் - இடவாகுபெயர். தளம் - சீதளம்
என்பதன் முதல் குறை, ''வெண்டளக் கலவைச்சேறு' என்பது நாட்டு
வருணனை.(43)                                                15