3725. | கவள யானை அன்னாற்கு, 'அந்தக் கடி நறுங் கமலத் - தவளை ஈகிலம்; ஆவது செய்தும்' என்று அருளால், திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ; செங் கண் குவளை காட்டுவ; துவர் இதழ் காட்டுவ குமுதம். |
கவள யானை அன்னாற்கு - கவளங் கவளமாக உண்ணும் இயல்புடைய யானையை ஒத்த இராமபிரானுக்கு; அந்தக் கடிநறும் கமலத்தவளை - அந்த மணம்மிக்க செந்தாமரை மலரிலுள்ள திருமகளை (சீதையை); ஈகிலம் - கொண்டு வந்து சேர்க்கும் திறமை இல்லோம்; ஆவது செய்தும் - (எனினும்) இயன்ற உதவியைச் செய்வோம் என்று; அருளால் - இரக்கத்தால்; அன்னங்கள் - (அப் பொய்கையில் உள்ள) அன்னங்கள்; திவள - துவளும்படியாக; திரு நடை காட்டுவ - (சீதையின்) நடையழகைக் காட்டுவனவாயின; குவளை - குவளை மலர்கள்; செங்கண் காட்டுவ - செவ்விய கண்களின் அழகைக் காட்டுவனவாயின; குமுதம் - குமுதமலர்கள்; துவர் இதழ் காட்டுவ - செந்நிறம் வாய்ந்த இதழின் அழகைக் காட்டுவனவாயின. சீதையைக் கொண்டு வந்து சேர்க்கும் திறன் இல்லாததால், இயன்ற உதவியைச் செய்வோம் எனக்கருதி அன்னங்கள் சீதையின் நடையழகையும், குவளை விழியழகையும், குமுதம் இதழழகையும் காட்டின. யானை அன்னான் - இராமன். கம்பீரமான தோற்றம், நடை, வலிமை பற்றி யானை உவமையாயிற்று. திருமகளே சீதையாக அவதரித்ததால் 'கமலத்தவள்' எனப்பட்டனள். ''போதினை வெறுத்து அரசர் பொன்மனை புகுந்தாள்'' என்றார் முன்னரும். (1151) கவளம் : வாயளவு கொண்ட உணவுத்திரள். பாடல் தற்குறிப்பேற்ற அணி. 17 |