3727.ஏலும் நீர் நிழல், இடை
     இடை எறித்தலின், படிகம்
போலும் வார் புனல் புகுந்துளவாம்
     எனப் பொங்கி,
ஆலும் மீன் கணம் அஞ்சின
     அலம்வர, வஞ்சிக்
கூல மா மரத்து, இருஞ் சிறை
     புலர்த்துவ - குரண்டம்.

     ஏலும் நீர் - பொருந்திய நீரில்; நிழல் இடை இடை எறித்தலின் -
(மரங்களிலுள்ள கொக்குகளின்) நிழல் இடையிடையே விளங்குதலாலே; படிகம்
போலும் வார்புனல் -
பளிங்கு போன்று விளங்கும் மிக்க நீரினுள்;
புகுந்துளவாம் என -
(கொக்குகள் தம்மை உண்ணப்) புகுந்துள்ளன என்று
எண்ணி; பொங்கி ஆலும் மீன்கணம் - (இயல்பாகத்) துள்ளி விளையாடும்
மீன் கூட்டங்கள்; அஞ்சின அலம்வர - அஞ்சி வருத்தமடையுமாறு;
குரண்டம் -
கொக்குகள்; வஞ்சிக் கூலமா மரத்து - கரையிலுள்ள பெரிய
வஞ்சி மரத்திடை; இருஞ்சிறை புலர்த்துவ - (தம்) பெரிய சிறகுகளை
உலர்த்திக் கொண்டிருப்பனவாயின.

     கரையருகே உள்ள மரங்களில் கொக்குகள் தம் சிறகுகளை உலர்த்திக்
கொண்டிருக்க, அவற்றின் நிழல் நீரில்பட, அந்நிழலைக்கண்ட மீன்கள் தம்மை
உண்பதற்காக நீரினுள் கொக்குகள் புகுந்துவிட்டன என்றெண்ணி மயங்கின
என்பதாம்; மயக்க அணி.

     தெளிவுடைமை பற்றிப் பளிங்குபோலும் புனல் என்றார்.  குரண்டம் -
கொக்கு; கூலம் - கரை; வஞ்சி - மரவகையுள் ஒன்று.                  19