3728. | அங்கு ஓர் பாகத்தில், அஞ்சனமணி நிழல் அடைய, பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாய, கங்குலும் பகலும் மெனப் பொலிவன கமலம்; மங்கைமார் தட முலை எனப் பொலிவன, வாளம். |
அங்கு ஓர் பாகத்தில் - அப்பொய்கைக் கரையின் ஒரு பக்கத்தில்; அஞ்சன மணி நிழல் அடைய - நீலமணியின் ஒளி படிவதாலும்; பங்கு பெற்ற ஒளிர் பதுமராகத்து ஒளி பாய - மற்றொரு பகுதியில் பதுமராகத்தின் ஒளி பாய்வதாலும்; கமலம் - தாமரை மலர்கள்; கங்குலும் பகலும் எனப் பொலிவன - இரவு போலவும் பகல் போலவும் (ஒரே சமயத்தில்) அழகுடன் விளங்கின; வாளம் - இணையாக உள்ள சக்கரவாகப் பறவைகள்; மங்கையர் தடமுலை எனப் பொலிவன - பெண்களின் பெரிய தனங்களைப் போல அழகுபெற்றன. இருளில் குவிவதும், ஒளியில் மலர்வதும் தாமரையின் இயல்பு; நீல மணியின் காரொளி படும் பகுதியில் குவிந்தும், பதுமராகத்தின் செவ்வொளி படும் பகுதியில் மலர்ந்தும் தாமரைகள் விளங்கின என்கிறார். இணை பிரியாத் தன்மை கொண்ட சக்கரவாகப் பறவைகள் மகளிர் மார்பகம் போலப் பொலிந்தன என்கிறார். பகலும்மென - விரித்தல் விகாரம். 20 |