3729. | வலி நடத்திய வாள் என வாளைகள் பாய, ஒலி நடத்திய திரைதொறும் உகள்வன, நீர்நாய் கலிநடக் கழைக் கண்ணுளர் என நடம் கவின, பொலிவு உடைத்து என, தேரைகள் புகழ்வனபோலும். |
வலி நடத்திய வாள் என- வலிமையோடு வீசிய வாளாயுதம் போன்று; வாளைகள் பாய- (அப்பொய்கையில்) வாளை மீன்கள் பாய்ந்து செல்ல; ஒலி நடத்திய திரைதொறும்- ஒலித்துக் கொண்டு செல்வதாகிய அலைகளிடையே; உகள்வன நீர்நாள்- உருண்டு செல்வனவாகிய நீர் நாய்கள்; கலி நட - (சதங்கை) ஒலிக்கும் நடையுடைய; கழைக் கண்ணுளர் என - கழைக்கூத்தாடிகள் போல; நடம் கவின - (அவ்வாளைமீன்களின் மேல்) நடனத்தை அழகியதாகச் செய்ய; தேரைகள் - அதைக்கண்ட) தவளைகள்; பொலியுடைத்தென-நடனம் நன்றாய் இருக்கின்றதென; புகழ்வன போலும்- புகழ்ந்து பேசுவன போன்றன. வாளைகள் பாய்தலும் நீர்நாய்கள் அலைகளிடையே உருண்டு செல்லுதலும், தவளைகள் ஒலித்தலும் ஆகிய நிகழ்ச்சிகளால் பொய்கை, கழைக்கூத்து நடைபெறும் இடம்போல் விளங்கிற்று. அலை கயிற்றுவடமாகவும், நீர்நாய்கள் கயிற்றின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடிகளாகவும், வாளை பாய்தல் கழைக்கூத்தாடிகள் வீசும் வாளின் வீச்சாகவும், தவளைகளின் ஒலி பாராட்டுரையாகவும் கற்பனை செய்யப்பட்டன. தவளையின் ஒலி பாராட்டுரையாகத் தோன்றியது தற்குறிப்பேற்ற அணியாகும். வாளை பாய்தலுக்கு வாள் வீச்சு உவமையாதல் 'வாளென வாளை பாய்வன' (1180) 'வாளென வாளைபாய' (2583) எனச் சிந்தாமணியும் 'வாளை வாளிற் பிறழ' (390) என நற்றிணையும் உரைப்பதில்காண்க. 21 |