அறுசீர் ஆசிரியவிருத்தம்

3731.'வரிஆர் மணிக் கால் வாளமே! மட
     அன்னங்காள்! எனை நீங்கத்
தரியாள் நடந்தாள்; இல்லளேல்
     தளர்ந்த போதும் தகவேயோ?
எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால்,
     ஈது இசை அன்றோ?
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின்,
     பூசல் பெரிது ஆமோ?

     வரி ஆர் - வரிகள் பொருந்திய; மணிக்கால் வாளமே- அழகிய
கால்களை உடைய சக்கரவாகப் பறவைகளே!; மட அன்னங்காள் -
இளமையான அன்னங்களே!; என்னை நீங்கத் தரியாள் - என்னை
விட்டுப் பிரிந்திருக்க ஆற்றாதவளாகிய சீதை; நடந்தாள் - பிரிந்தாள்;
இல்லளேள் -
இங்கில்லை என்பதை உணர்ந்தும்; தளர்ந்த போதும் -
பிரிவால் நான் வருந்துகின்ற சமயத்தும்; தகவேயோ - (நீங்கள்
இரங்காமலிருப்பது) தகுதி தானா?எரியா நின்ற ஆருயிர்க்கு - பிரிவால்
வாடுகின்ற எனது அரிய உயிர்க்கு; இரங்கினால் - இரக்கம் காட்டுவீராயின்;
ஈது இசை அன்றோ -
இஃது உங்கட்குப் புகழை அன்றோ தரும்? பிரியாது
இருந்தேற்கு
- இதுகாறும் சீதையைப் பிரியாதிருந்த எனக்கு; ஒரு மாற்றம்
பேசின்
- (ஆறுதலாக) ஒரு வார்த்தை பேசினால்; பூசல் பெரிது ஆமோ -
(உங்களுக்கு அதனால்) பெரிய பொல்லாங்கு உண்டாகுமோ? 

     சீதை அருகில் இருந்தால் அவள் உறுப்புகட்குத் தோற்ற சக்கரவாகப்
பறவைகளும், அன்னங்களும் இராமன் முன் தோன்றத் தயங்கலாம்; அவள்
இப்பொழுது அருகில் இல்லாததால் இராமன் முன்னர் வரத் தயங்க
வேண்டுவதில்லை.  நேரில் வந்து ஆறுதல் கூறி உதவலாம் என்றபடி.

'நாளங்கொள் நளினப் பள்ளி நயனங்கள் அமையநேமி
வாளங்கள் உறைவ கண்டு மங்கைதன் கொங்கை நோக்கும் (2735)

என்றும், 'ஓதிமம் ஒதங்கக்கண்ட உத்தமன் உழையள் ஆகும். சீதை தன்
நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்'' (2739) என்றும்
சூர்ப்பணகைப் படலத்தில் சக்கரவாகப் பறவையும் அன்னமும் முறையே
சீதையின் தனத்திற்கும் தோற்றொளித்து ஓடுவதை குறிப்பதைக் காண்க.    23