3732. | 'வண்ண நறுந் தாமரை மலரும், வாசக் குவளை நாள்மலரும், புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின், தரும் பொய்காய்! கண்ணும் முகமும் காட்டுவாய்; வடிவும் ஒருகால் காட்டாயோ? ஒண்ணும் என்னின், அஃது உதவாது, உலோவினாரும் உயர்ந்தாரோ?' |
வண்ண நறுந்தாமரை மலரும் - அழகிய மணம் மிக்க தாமரை மலர்களையும்; வாசக் குவளை நாள் மலரும் - வாசனை பொருந்திய அன்றலர்ந்த குவளை மலர்களையும்; புண்ணின் எரியும் - புண்போல் எரிகின்ற; ஒரு நெஞ்சம் - (சீதையின் பிரிவால்) தனிமையுற்றுக் கலங்கும் நெஞ்சிற்கு; பொதியும் மருந்தின்- மேலே தடவுகின்ற மருந்து போல; தரும் பொய்காய் - காட்டுகின்ற பொய்கையே!கண்ணும் முகமும்- (சீதையின்) கண்களையும் முகத்தையும்; காட்டுவாய் - காட்டுகின்ற நீ; வடிவும் ஒருகால் காட்டாயோ-அவள் முழுவடிவத்தையும் ஒருமுறையேனும் காட்டமாட்டாயா? ஒண்ணும் என்னின் - தம்மால் உதவ இயலுமாயின்; அஃது உதவாது - அவ்வுதவியைச் செய்யாமல்; உலோவினாரும் உயர்ந்தாரோ - உலோபம் செய்பவர்களும் உயர்ந்தவர்கள் ஆவரோ? (ஆகார்). பொய்கையில் மலர்ந்துள்ள தாமரையும் குவளையும் பிராட்டியின் கண் போல் இருந்ததால் இராமனின் புண்பட்ட நெஞ்சிற்கு மருந்து போலாகிச் சிறிது துன்பமாற்றின. கண்ணையும் முகத்தையும் காட்டுகின்ற பொய்கை முழு வடிவையும் காட்ட வேண்டும் என வேண்டினான். தாமரை மலர், குவளை மலர் என்று உவமானப் பொருள்களைக் கூறியதற்கேற்ப, முகமும் கண்ணும் என்னாது, கண்ணும் முகமும் எனக் கூறியது எதிர்நிரல்நிறை அணியாகும். உலோவினோர்- விணையாலணையும் பெயர்; ஓகாரம் எதிர்மறை. ''உளப்பரும் பிணிப்பறா உலோபம் ஒன்றுமே அளப்பருங்குணங்களை அழிக்கும்'' (363) என்பதால் உலோபிகள் உயர்ந்தோர் ஆகார் என்பது புலனாகும். 24 |