3734. | 'ஓடாநின்றகளி மயிலே! சாயற்கு ஒதுங்கி, உள் அழிந்து, கூடாதாரின் திரிகின்ற நீயும், ஆகம் குளிர்ந்தாயோ? தேடாநின்ற என் உயிரைத் தெரியக் கண்டாய்; சிந்தை உவந்து ஆடாநின்றாய்; ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ? |
ஓடாநின்ற களிமயிலே- ஓடி மகிழ்கின்ற மயிலே! சாயற்கு ஒதுங்கி- (சீதையின்) சாயலுக்குத் தோற்று; உள் அழிந்து- மனம் வருந்தி; கூடாதாரின் - பகைவரைப்போல; திரிகின்ற நீயும் - திரிகின்ற நீயும்; ஆகம் குளிர்ந்தாயோ- (இப்போது சீதை இல்லாமை பற்றி) மனம் குளிர்ந்தனையோ? தேடா நின்ற என் உயிரை - தேடிக்கொண்டிருக்கும் என் உயிர்போன்ற சீதையை; தெரியக் கண்டாய் - (முன்பு) கண்ணாரக் கண்டிருப்பாய்; சிந்தை உவந்து ஆடா நின்றாய்- (எனினும் இப்போது என் நிலைகண்டு மனமிரங்காது) மனம் மகிழ்ந்து ஆடுகின்றாய்; ஆயிரம்கண் உடையாய்க்கு- ஆயிரம் கண்களை உடைய உனக்கு; ஒளிக்கும் ஆறு உண்டோ? - (தெரியாமல்) மறையும் வழியும் உண்டோ? (இல்லை). ஒதுங்குதல் - தோல்வியுறுதல்; கண் - பீலிக்கண்கள். ஆயிரம் என்றது பல என்னும் பொருளைத் தந்தது. இயற்கையில் மயில் மகிழ்ந்து ஆடுதற்குச் சீதை பிரிந்து போனதை அறிந்தும் இரங்காது மகிழ்ந்ததாகக் கூறியது தற்குறிப்பேற்ற அணியாம். ''நாணின தொகுபீலி கோலின நடம் ஆடல், பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின் காணிய எனல் ஆகும். களிமயில் - இவை காணாய்'' (2002) என்ற அடிகளை ஒப்புநோக்குக. 26 |