3735.'அடையீர்எனினும் ஒரு மாற்றம் அறிந்தது
     உரையீர்; - அன்னத்தின்
பெடையீர்! - ஒன்றும் பேசீரோ?
     பிழையாதேற்குப் பிழைத்தீரோ?
நடை நீர் அழியச் செய்தாரே நடு
     இலாதார்; நனி அவரோடு
உடையீர் பகைதான்; உமை நோக்கி
     உவக்கின்றேனை முனிவீரோ?

     அன்னத்தின் பெடையீர் - பெண் அன்னங்களே! அடையீர்
எனினும்-
என்னிடத்து வரமாட்டீராயினும்; ஒரு மாற்றம் அறிந்தது
உரையீர் -
(சீதையைப்பற்றி) நீங்கள் அறிந்ததொரு வார்த்தையாயினும்
சொல்லுங்கள்; ஒன்றும் பேசீரோ - (என்னிடம்) ஒன்றும் பேச
மாட்டீர்களோ?; பிழையாதேற்கு- உங்களுக்கு ஒரு குற்றமும் புரியாத
எனக்கு; பிழைத்தீரோ - பிழை செய்வீர்களோ?; நடு இலாதார் -
இடையில்லாத சீதாபிராட்டியாரே; நடை நீர் அழியச் செய்தாரே- நீங்கள்
நடையழகில் தோல்வியடையுமாறு செய்தார்; அவரோடு தான் நனி பகை
உடையீர்
- அவரோடுதான் நீங்கள் மிக்க பகைமை உடையவர் ஆவீர்; உமை
நோக்கி உவக்கின்றேனை -
உங்களை நோக்கி (உங்கள் நடை சீதை
நடையை ஒக்கும் என்றெண்ணி) மகிழ்கின்ற என்னை; முனிவீரோ -
வெறுப்பீர்களோ?

     மாற்றம் - சொல்; நடை - நடையழகு.

     உங்கள் நடையைத் தன் நடையழகால் தோற்கச் செய்த சீதை மாட்டுப்
பகைமை கொள்வது முறையாகும்.  ஒரு பிழையும் செய்யாமல் உங்கள்
நடையை நோக்கி மகிழ்கின்ற என்னிடத்தும் பகைமைகொண்டு அருகில்
வராதாதும், ஆறுதலாக ஒன்றும் பேசாததும் தகுதியாமோ என்பதாம்.
பெடையார் - திணைவழுவமைதி. சீதையின் இடை பற்றி ''மருங்கு இலா
நங்கை'', ''இல்லையே நுகப்பு'' என முன்னரும்.  (517, 728)கூறுவர்.     27