3737.'ஒருவாசகத்தை வாய் திறந்து இங்கு
     உதவாய், பொய்கைக் குவிந்து ஒடுங்கும்
திரு வாய் அனைய சேதாம்பற்கு
     அயலே கிடந்த செங் கிடையே!
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும்
     வீழிச் செவ்விக் கொழுங் கனி வாய்
தருவாய்; அவ் வாய் இன் அமுதும்,
     தண்ணென் மொழியும் தாராயோ?

     ஒரு வாசகத்தை வாய் திறந்து - ஒரு வார்த்தையினையும்
வாயைத்திறந்து சொல்லி; இங்கு உதவாய் - இங்கு (எனக்கு) உதவாமல்;
பொய்கை குவிந்து ஒடுங்கும் -
பொய்கையில் குவிந்து ஒடுங்கிக் கிடக்கும்;
திரு வாய் அனைய -
சீதையின் வாயைப்போன்ற; சேதாம்பற்கு -
செவ்வாம்பல் மலர்க்கு; அயலே கிடந்த செங்கிடையே- அருகில் கிடக்கும்
நெட்டியே! வெருவாது எதிர்நின்று- அஞ்சாமல் என் எதிரில் வந்து; அமுது
உயிர்க்கும் -
அமுதம் போன்ற சொற்களைப் பேசும்; செவ்வி வீழிக்
கொழுங்கனிவாய் -
அழகிய செழுமையான வீழிக்கனிபோன்ற சீதையின்
வாயை; தருவாய் - காட்டுவாய்; அவ்வாய் இன்னமுதும் - அந்த வாயில்
ஊறும் இனிய அமுதத்தையும்; தண்ணென் மொழியும்- குளிர்ந்த
சொல்லினையும்; தாராயோ - தரமாட்டாயோ?

     'நீ ஆம்பல் மலரைப்போல் இல்லாது சீதையின் வாயைப்போன்று வெளி
வந்து காட்டுகின்றனை. அதிலுள்ள இனிய அமுதச்சுவையினையும், இனிய
பேச்சுக்களையும் தரலாகாதோ' என இராமன் நெட்டியிடம் புலம்பிக் கூறியது.
ஒடுங்கும் சேதாம்பல் - பகற்பொழுது ஆதலின் செவ்வாம்பல் குவிந்து
காணப்பட்டது.  சிவந்த நெட்டி வாயிதழ்க்கு உவமை ஆயிற்று.  நெட்டி,
வடிவத்தால் வாயினை ஒத்தும், வாயின் இன்னமுதும் தண்ணென் மொழியும்
தராத வேற்றுமையும் கொண்டிருப்பதால் வேற்றுமை அணி அமையும். ஒரு
வாசகத்தை என்னுமிடத்து இழிவுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.      29