3738. | 'அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு, அடைவு உண்டு அன்றோ? - கொடி வள்ளாய்! மலர்க் கொம்பு அனைய மடச் சீதை காதே; மற்று ஒன்று அல்லையால்; பொலக் குண்டலமும், கொடுங் குழையும், புனை தாழ் முத்தின் பொன்- தோடும், விலக்கி வந்தாய்; காட்டாயோ? இன்னும் பூசல் விரும்புதியோ? |
|
கொடிவள்ளாய் - வள்ளைக் கொடியே!மலர்க்கொம்பு அனைய - பூங்கொம்பைப் போன்ற; மடச் சீதை - மடமைக் குணம் பொருந்திய சீதையின்; காதே - காதே ஆவாய்; மற்று ஒன்று அல்லை ஆல் - பிறிதொன்றில்லை; ஆதலால்; அலக்கண் உற்றேற்கு - (சீதையைப் பிரிந்து) துன்புறும் எனக்கு; உற்று உதவற்கு - நெருங்கிய உதவுதற்கு; அடைவு உண்டு அன்றோ- இயைபு உண்டு அல்லவா? பொலக்குண்டலமும் - (அங்ஙனமிருக்கவும்) பொன்னால்செய்த குண்டலத்தையும்; கொடுங்குழையும்- வளைந்த காதணியையும்; புனை தாழ்முத்தின் பொன்தோடும் - அழகிய தொங்குகின்ற முத்துக்களை உடைய பொன்தோட்டினையும்; விலக்கி வந்தாய் - நீக்கி வந்தாய்; காட்டாயோ?- (அவற்றை அணிந்து) காட்டமாட்டாயா?; இன்னும் பூசல் விரும்புதியோ - மேலும் பகையினை விரும்புவாயோ? 'நீ வடிவத்தால் சீதையின் காதை ஒத்திருப்பதால் குண்டலம், குழை, தோடு ஆகியவற்றை அணிந்திருப்பின், நான் உன்னைக் கண்டு ஒருவாறு ஆறுதல் அடைந்திருப்பேன். நீ அவற்றை நீக்கி வந்தாய்; காதுகளால் சீதை உனது அழகை அழித்தாள் என்ற பழம் பகைமைகொண்டு துன்புற்று வருந்தும் எனக்கு உதவாமல் இருப்பது விரும்பத்தக்கதன்று' என்று இராமன் வள்ளைக்கொடியொடு வருந்தினான். அலக்கண் - துன்பம்; சீதையின் பிரிவால் ஏற்பட்டது; மலர்க்கொம்பு - கொம்பு மேனிக்கும், மலர் - கண், கை, கால், முகம் முதலிய உறுப்புக்களுக்கும் உவமை; மடமை - எல்லாம் அறிந்தும் அறியாதது போலிருக்கும் தன்மை; குண்டலம், குழை, தோடு என்பன மகளிர் காதணிகள். குழை - தளிர் வடிவமான காதணி. தொங்கட்டான்என்பர். 30 |