கலிவிருத்தம் 3740. | என்று அயா உயிர்க்கின்றவன், ஏடு அவிழ் கொன்றை ஆவிப்புறத்து இவை கூறி, 'யான் பொன்ற, யாதும் புகல்கிலை போலுமால், வன் தயாவிலி!' என்ன வருந்தினான்; |
என்று இவை கூறு - என்று இத்தகைய வார்த்தைகளைப் பேசி; அயா உயிர்க்கின்றவன் - பெருமூச்சு விடுகின்றவனாகிய இராமபிரான்; ஏடு அவிழ் கொன்றை- இதழ்கள் மலர்ந்த கொன்றை மரங்களை உடைய; ஆவிப்புறத்து - பொய்கையின் கரையில் இருந்து; யான் பொன்ற - (கொன்றையை நோக்கி) ''சீதையின் பிரிவால் நான் அழிந்துபடுதலைக் கண்டும்; யாதும் புகல்கிலை போலுமால் - ஒன்றும் ஆறுதலாகக் கூறாது இருக்கின்றாய் (ஆதலால்); வன் தயாவிலி - வன்மைக் குணமுடைய அருளற்ற கொடியை''; என்ன வருந்தினான் - என்று வருந்திப் பேசினான். பிரிந்தவர்கள் கொன்றையை நோக்கி வருந்துதல் நூல்மரபு. 'கொன்றைக் கொடியாய் கொணர்கின்றலையோ? என்றைக்கு உறவாக இருந்தனையோ?' என்று பின்னரும் (4205) கொன்றவை நோக்கி இராமன் பேசுவதைக் காண்க. 32 |