3741. | வார் அளித் தழை மாப் பிடி வாயிடை, கார் அடிளக் கலுழிக் கருங் கைம் மலை நீர் அளிப்பது நோக்கினன், நின்றனன் - பேர் அளிக்குப் பிறந்த இல் ஆயினான். |
பேர் அளிக்கு - மிக்க கருணைக்கு; பிறந்த இல் ஆயினான் - பிறப்பிடமாக உள்ள இராமபிரான்; கார் அளி - கரிய வண்டுகள் மொய்க்கப்பெற்ற; கலுழிக் கருங்கைம்மலை - மதநீர்ப்பெருக்கையுடைய கரிய ஆண்யானைகள்; வார் அளித்தழை - நீண்ட குளிர்ந்த தழைகளை; மாப்பிடி வாயிடை- (உண்ணும்) பெரிய பெண் யானைகளின் வாயில்; நீர் அளிப்பது - தண்ணீரை முகந்து கொடுத்து ஊட்டுவதை; நோக்கினன் நின்றான் - நோக்கி நின்றான். இராமன் கருணையின் பிறப்பிடமானவன் என்று கம்பர் பின்னரும் 'கருணையின் நிலையும் அன்னான்' (6975) என்று கூறுவார். கைம்மலை - யானை; முன்னே பிடி கூறப்பட்டதால் 'கைம்மலை' என்பது ஆண்யானையைக் குறித்தது. மதநீர்ப்பெருக்குடைய களிறும் தன் பிடி வருந்தா வண்ணம் நீரூட்டி அன்பு காட்டுவதைக் கண்ட இராமன், அறிவும் ஆண்மையும் மிக்க தன்னால் சீதையின் துயர் நீக்கிப் பாதுகாக்க இயலாமை எண்ணி வருந்தி நின்றான். 'துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப், பிடியூட்டிப் பின் உண்ணுங் களிறு'' (கலி. பாலை. 11.) என்ற அடிகள் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கன. 33 |