மாலைக் கடன் முடித்தல்

3742.ஆண்டு, அவ், வள்ளலை, அன்பு
     எனும் ஆர் அணி
பூண்ட தம்பி,
     'பொழுது கழிந்ததால்;
ஈண்டு இரும் புனல் தோய்ந்து,
     உன் இசை என
நீண்டவன் கழல் தாழ்,
     நெடியோய்! ' என்றான்.

     ஆண்டு - அப்பொழுது; அன்பு எனும் ஆர் அணிபூண்டதம்பி -
அன்பு என்னும் அரிய அணிகலனை அணிந்த தம்பியாகிய இலக்குவன்;
அவ்வள்ளலை -
வள்ளலாகிய இராமனைப் பார்த்து; 'நெடியோய் -
பெரியோய்!பொழுது கழிந்தது ஆல் - பொழுது போயிற்று ஆதலால்;
ஈண்டு இரும்புனல் தோய்ந்து
- இப்பொழுது இப்பொய்கை நீரில்
மூழ்கி; உன் இசையென நீண்டவன் - உன் புகழைப் போல வளர்ந்த
திருமாலின்; கழல் தாழ் - திருவடிகளை வணங்குவாயாக';
என்றான் -
என்று வேண்டினான்.

     பொழுது கழிந்தது அறியாது இராமன் வருந்த, இலக்குவன் இவ்வாறு
கூறினான். பிற அணிகள் உடம்பை அழகு செய்ய, அன்பு எனும் அணி
உயிரை அழகு செய்கிறது.  அணி - காரணப்பொதுப்பெயர்.       34