3743. | அரைசும், அவ் வழி நின்று அரிது எய்தி, அத் திரை செய் தீர்த்தம், முன் செய் தவம் உண்மையால், வரை செய் மா மத வாரணம் நாணுற, விரை செய் பூம் புனல் ஆடலை மேயினான். |
அரைகம் - இராமபிரானும்; அவ்வழி நின்று அரிதுஎய்தி - அந்த இடத்திலிருந்து அரிதாகச்சென்று; அத்திரை செய் தீர்த்தம் - அலைமோதும் அந்த பம்பைப் பொய்கை நீர்; முன்செய்தவம் உண் மையால் - முன்செய்த தவமுடைமையால்; வரைசெய் மாமத வாரணம் நாணுற - மலை போன்றதும் பெரும் மதப்பெருக்குடையதுமான யானையும் நாணும்படி; விரைசெய் பூம்புனல் - மணம் கமழும் மலர்கள் நிறைந்த நீரில்; ஆடல் மேயினான்- நீராடுதலை மேற்கொண்டான். தானும் தூயதாய்த் தன்னிடம் நீராடுவார் துயர்நீக்கித் தூய்மை நல்கும் சிறப்புடையது தீர்த்தமாகும். அத்தகைய சிறப்புடைய பொய்கை இராமன்மேனி முழுவதும் படியப்பெறும் சிறப்பினைப் பெற்றது. அதற்கு முன் செய்த தவப்பயன் காரணம் என்பதால் 'திரைசெய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால்' என்றார். இராமன் நீராடியதற்கு ஒரு மதயானை நீரில் ஆடியது ஒப்பாகும். அரைசு - அரசு என்பதன் போலி. 35 |