3750.காலையே கடிது நெடிது ஏகினார்
     கடல் கவினு
சோலை ஏய் மலை தழுவு கான
     நீள் நெறி தொலைய,
ஆலை ஏய் துழனி அகநாடர்,
     ஆர்கலி அமுது
போலவே உரைசெய் புன மானை
     நாடுதல் புரிஞர்.

     ஆலை ஏய் துழனி - கரும்பாலைகளால் நிறைந்த ஓசையை யுடைய;
அகல் நாடர் - பரந்த கோசலநாட்டிற்குரிய இராமலக்குவர்; ஆர்கலி
அமுதுபோலவே -
ஒலிக்கும் பாற்கடலில் தோன்றிய அமுதம் போல;
உரைசெய் -
இனிமையாகப் பேசுகின்ற; புன மானை - காட்டில் உள்ள
பெண்மானை ஒத்த சீதையை; நாடுதல் புரிஞர் - தேடுபவர்களாய்;  கடல்
கவினு சோலை ஏய்
- கடல்போன்ற சோலைகள் பொருந்தியதும்; மலை
தழுவும் -
மலைகள் தழுவப் பெற்றதுமான; கான நீள்நெறி - காட்டின்
நீண்ட வழிகள்; தொலைய - நீங்குமாறு; கடிதுநெடிது ஏகினார் -
விரைந்து நெடுந்தூரம் சென்றனர்.

     கரும்பாலைகளின் ஒலிமிகுதியைக் கூறியதால் கோசலநாட்டின் வளம்
புலனாயிற்று. 'ஆலை பாய் அமலை, ஆலைச் சாறுபாய் ஓதை(34) என நாட்டு
வர்ணனையில் கூறியுள்ளார்.  இப்போது ஆலையிட்ட கரும்புபோல
இராமலக்குவர் துன்பங்கள் அனுபவித்தாலும், பின்னர்க் கரும்பிலிருந்து பெறும்
சக்கரை போல அரக்கர்களை வென்று அறத்தை நிலைநாட்டி இன்பம்
அளிப்பர் என்பது குறிப்பாகும்.  சீதையின் சொல்லுக்கு அமுது உவமை.
'அஞ்சொற்கள் அமுதில் அள்ளிக்கொண்டவள்' என்றார் முன்னரும்.  (3136)
குளிர்ச்சியாலும், நிறத்தாலும், பரப்பாலும் சோலை கடலை ஒக்கும்.

     துழனி - ஒலி; ஆர்கலி - அன்மொழித்தொகை.                 42