கலிவிருத்தம் 3751. | எய்தினார், சவரி, நெடிது, ஏய மால் வரை எளிதின்; நொய்தின் ஏறினர், அதனின்; நோன்மை சால் கவி அரசு, செய்வது ஓர்கிலன்; அனையர் தெவ்வர் ஆம் என வெருவி, 'உய்தும் நாம்' என, விரைவின் ஓடினான், மலை முழையின். |
எய்தினார் - காடும் மலையும் கடந்து சென்ற இராமலக்குவர்; சவரி நெடிது ஏய - சபரி என்பவள் விரிவாக வழிசொல்லி அனுப்பிய; மால்வரை- பெரிய ருசியமுகம் என்னும் மலைமீது; எளிதின் நொய்தின் ஏறினர்- எளிதில் விரைவாக ஏறிச் சென்றனர்; அதனின் - அம்மலையில் இருந்த; நோன்மை சால்கவி அரசு - வலிமை மிக்க குரங்கினத்து அரசனாகிய சுக்கிரீவன்; அனையர் தெவ்வர் ஆம் என - வருகின்ற இவர்கள் நம் பகைவராவர் என்று; வெருவி - அஞ்சி; செய்வது ஓர்கிலன்- செய்வது இன்னதென்று அறியாதவனாய்; 'உய்தும் நாம்' என - 'நாம் இப்பொழுது தப்பிப் பிழைப்போம்' என்று கருதி; மலை முழையின்- அம்மலையின் குகை ஒன்றினுள்; விரைவின் ஓடினான் - வேகமாய் ஓடினான். சுக்கிரீவன் வாழும் ருசியமுகம் என்னும் மலைக்குப் போகும் வழியெல்லாம் நினைந்து சொல்லி ஏவியவள் சபரி. அதனால் 'சவரி நெடிதுஏய மால்வரை' என்றார். 'வினையறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய, துனைபரித் தேரோன் மைந்தன் இருந்தஅத் துளக்கில் குன்றம், நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள்' (3704) என்பதைக் காண்க. கடத்தற்கரிய மலையை இராமலக்குவர் தம் ஆற்றலால் எளிதில் கடந்தனர். கவந்தனும் சபரியும் புகழ்ந்து பேசிய சுக்கிரீவனைக் காணும் ஆர்வத்தால் விரைந்து ஏறினர் என்பதால் 'நொய்தின் ஏறினர்' என்றார். சுக்கிரீவன் அரசனாகும் நிலை பெறுவான் ஆதலின் 'கவியரசு' எனப்பட்டான். 1 |