3756. 'சிந்தையில் சிறிது துயர்
     சேர்வுற, தெருமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர்; நோ
     உறச் சிறியர் அலர்;
அந்தரத்து அமரர் அலர்; மானிடப்
     படிவர்; மயர்
சிந்தனைக்கு உரிய பொருள்
     தேடுதற்கு உறு நிலையர்;

     சிந்தையில் - (இவர்கள்) மனத்தில்; சிறிது துயர் சேர்வுற - சிறிது
துன்பம் வந்து அடைய; தெருமரலின் - அத்துன்பத்தால்; நொந்து
அயர்த்தவர் அனையர் -
மனம் வருந்திச் சோர்ந்தவர்கள் போன்று
காணப்படுகின்றனர்; நோவுற - (அவ்வாறு) எளிதில் துன்பம் அடைவதற்கு;
சிறியர் அலர் -
எளியவர்கள் அல்லர்; அந்தரத்து- தேவலோகத்து வாழும்;
அமரர் அலர் -
தேவர்கள் அல்லர்; மானிடப் படிவர் - மானிட
வடிவமுடையார்; மயர் சிந்தனைக்கு- மயங்கத்தக்க மனத்திற்கு; உரிய
பொருள் -
ஏற்ற ஒரு சிறந்த பொருளை; தேடுதற்கு - தேடுவதற்கு; உறும்
நிலையர் -
பொருந்திய நிலைமையினை உடையராக விளங்குகின்றனர்.

     மானிட வடிவம் என அறிந்ததால் தேவர் அல்லர் இவர்கள் எனத்
தெளிய முடிந்தது.  கண்ணிமைத்தல், கால்நிலம்தோய்தல் முதலிய
அடையாளங்களால் மானிடர் என அறிந்தான்.  எளிதில் துன்புறும் சிறியர்
அலர் என்றதால்.  அவர்கள் துயர்க்குரிய காரணம் பெரியதாய்
இருக்கவேண்டும் என்பது பெறப்பட்டது.

     தெருமரல் - தெருமா - பகுதி; மயர்சிந்தனை - வினைத்தொகை    6