3757.'தருமமும் தகவும், இவர்; தனம்
     எனும் தகையர், இவர்;
கருமமும் பிறிது ஓர் பொருள் கருதி
     அன்று; அது கருதின்,
அரு மருந்து அனையது, இடை
     அழிவு வந்துளது; அதனை,
இருமருங்கினும், நெடிது
     துருவுகின்றனர், இவர்கள்.

     தருமமும் தகவும் இவர் - தருமமும் நல்லொழுக்கமுமாகவே இவர்கள்
கொள்ளத்தக்கவர்; தனம் எனும் தகையர் - தமக்குரிய செல்வமாக
தருமத்தையும் தகவையும் எண்ணும் தன்மையுடையவர்கள்; இவர் கருமமும் -
இவர்களது செயலும்; பிறிது ஓர் பொருள் - வெறோருபொருளை; கருதி
அன்று -
கருதியது அன்று; அது கருதின் - அது குறித்து ஆராய்ந்து
பார்த்தால்; அருமருந்து அனையது - பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற
பொருளிற்கு; இடை அழிவு வந்துளது - இடையிலே அழிவு வந்திருக்கின்றது;
அதனை -
அந்த அரிய பொருளையே; இவர்கள் - .; இருமருங்கிலும் -
இரண்டு பக்கங்களிலும்; நெடிது துருவுகின்றனர் - நெடிதாகப் பார்வையைச்
செலுத்தித் தேடுகிறார்கள்.

     அனுமன் சூரியனிடம் எல்லாக்கலைகளையும் கற்றவனாதலின்
இராமலக்குவரின் முகக்குறிப்புகளால் அவர்களின் நிலையை ஊகித்து
அறிந்தனன்.

     தருமமும் தகவும் செல்வமாகும் என்பதை 'அறத்தினூஉங்கு ஆக்கமும்
இல்லை' (குறள் - 32) என வள்ளுவரும் குறித்தார்.  அருமருந்து -
கிடைத்தற்கரிய தேவ அமுதம்; சீதை அம்மருந்து போன்றவள். 'மருந்து
அனையதேவி' (5350) என்றது காண்க.                              7