3763. | துன்பினைத் துடைத்து, மாயத் தொல் வினை தன்னை நீக்கி, தென் புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவ்ரோதாம்? என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்; அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன். |
துன்பினைத் துடைத்து - பிறவித் துன்பங்களைப் போக்கி; மாயத்தொல்வினை தன்னை நீக்கி - (அத்துன்பங்களுக்குக் காரணமான) மயக்கத்தால் உண்டாகின்ற பழவினை தன்னைப் போக்கி; தென்புலத்து அன்றி- தெற்குத் திசையிலுள்ள யமலோகத்தில் அல்லாமல்; மீளா நெறி உய்க்கும் - (சென்றவர்கள்) மீண்டு வருதலில்லா முத்திநெறியில் செலுத்துகின்ற; தேவரோதாம் - கடவுளரோ இவர்கள்?; எனக்கு என்பு உருகுகின்றது - (இவர்கள்மாட்டு) என் எலும்பும் உருகுகின்றது; அளவு இல்காதல் இவர்கின்றது - அளவு இல்லாத காதல் மேன்மேலும் மிகுகின்றது; அன்பினுக்கு அவதி இல்லை - (இவர்களிடம் எனக்குத் தோன்றும்) அன்பிற்கு எல்லை இல்லை; அடைவு என்கொல் - (அவ்வாறு ஆவதற்குக்) காரணம் யாதோ?; அறிதல் தேற்றேன் - அறிய இயலாதவனாக இருக்கின்றேன். துன்பு என்றது பிறவித்துன்பங்களை; அவையாவன தன்னைப்பற்றி வரும் தலைவலி முதலாகிய ஆதியாத்மிகம், பிற உயிர்களால் வரும் ஆதிபௌதிகம். தெய்வத்தால் நிகழும் ஆதிதெய்விகம் எனப்படுவன. வினை அநாதி காலந்தொட்டு வருதலின் தொல்வினை எனப்பட்டது; நல்வினை, தீவினைகளாய பழவினை எனப்பொருள்படும். 'இருள் சேர் இருவினை' என்றார் வள்ளுவர். (குறள். 5); மீளாநெறி - மீண்டும் பிறப்பின்கண் வாராத முக்திநெறி. இராமனால் சரபங்கனும் சபரியும் பிறப்புநீங்கி முக்தியடைவதைக் காணலாம். 'இவர்களோ தருமம் ஆவர்' என்றுமுன்னர் வினவியவன் இந்தப்பாடலில் மீளாநெறியுய்க்கும் தேவரோ என்று வியப்பதனால் வந்திருப்பவர்களின் மேன்மையை அனுமன் உணர்ந்து கொண்டான் என அறியமுடிகிறது. இறைவனைக் காண்கையில் எலும்பு உருகும் என்பதை 'இரும்பு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து என் என்புருக்கி' (திருவாசகம் 544) என்ற மணிவாசகர் வாக்கும் உணர்த்தும். அனுமன் உருகியதுபோல வீடணனும் 'என்புறக் குளிரும் நெஞ்சுருகும் மேலவன், புன்புலப் பிறவியின் பகைஞன் போலுமால்'' (6384) என்று கூறுவதைக் காணலாம். மீளாநெறி உய்க்கும் தேவர்க்கன்றித் தன்னுள்ளம் அன்பு செலுத்தி உருகாது என்பதையும் அனுமன் உணர்த்தினான் என்க. 13 |