3766. | 'இம்மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பரிதிச் செல்வன் செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி விம்மல் ஊற்று அனையன் ஏவ, வினவிய வந்தேன்' என்றான் எம் மலைக் குலமும் தாழ, இசை சுமந்து, எழுந்த தோளான். |
எம்மலைக் குலமும் - எந்த மலைக்கூட்டமும்; தாழ- தாழ் வுறும்படி; இசை சுமந்து - புகழைச் சுமந்து கொண்டு; எழுந்த தோளான் - உயர்ந்த தோள்களை உடையவனாகிய அனுமன்; இம்மலை இருந்து வாழும் - ''இந்த ருசிய முகம் என்னும் மலையில் தங்கியிருந்து வாழ்ந்து வரும்; எரிகதிர்ப் பரிதிச் செல்வன் - எரிகின்ற ஒளிக்கதிர்களை உடைய சூரிய தேவனின் மகனாகிய; செம்மலுக்கு - தலைவனாகிய சுக்கிரீவனுக்கு; ஏவல்செய்வேன் - ஏவிய பணிகளைச் செய்பவனாவேன்; தேவ நும்வரவு நோக்கி- நும்முடைய வருகையைப் பார்த்து; விம்மல் உற்று - உள்ளப்பூரிப்பு அடைந்து; அனையன் - அந்தச் சுக்கிரீவன்; ஏவ - (உங்களை யாரென்று அறிந்து வருமாறு) ஏவியதால்; வினவிய வந்தேன் - விசாரித்து அறிந்து செல்ல வந்தேன்''; என்றான் - என்றான். தோள்கள் மலைக்கூட்டத்தினும் உயர்ந்தும் வலிமையுடையனவாயும் இருத்தலால் 'எம்மலைக் குலமும்' தாழ எனப்பட்டது. புகழ் ஆகிய சுமையைச் சுமந்தும் தாழாமல் உயர்ந்த தோள் என்று மேலும் தோள்களின் சிறப்பை உணர்த்த, 'இசை சுமந்து எழுந்த' என அடைமொழி தரப்பட்டது. 'இம்மலை' என்ற அண்மைச்சுட்டால் இராமன் வந்துள்ள இடம் ருசியமுகம் என்பது பெறப்படுகிறது. தேவ, நும் என்றது ஒருமைபன்மை மயக்கம். முன்னை செய்யுளில் ''கோலமேனிய, செய்ய கண்ண!'' எனப் புறஅழகில் ஈடுபட்ட அனுமன் இப்பாடலில் 'மீளா நெறியுய்க்கும் தேவரோதாம்' என எண்ணியதற்கேற்பத் ''தேவ'' என விளித்தான். 'பரிதிச் செல்வன் செம்மல்' என்பதால் சுக்கிரீவன் பெருையைும் 'இசை சுமந்து எழுந்த தோளான்' என்பதில் அனுமன் பெருமையும் இப்பாடலில்உணர்த்தப்பட்டுள்ளன. 16 |