சுக்கிரீவனைக் காட்டுக என இராமன் வேண்டுதல் 3770. | 'எவ்வழி இருந்தான், சொன்ன கவிக் குலத்து அரசன்? யாங்கள், அவ் வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம்; இவ்வழி நின்னை உற்ற எமக்கு, நீ இன்று சொன்ன செவ் வழி உள்ளத்தோனைக் காட்டுதி, தெரிய' என்றான். |
சொன்ன கவிக்குலத்து அரசன் - (அனுமனை நோக்கி) ''நீ சொன்ன குரங்குக் கூட்டத்தின் அரசனாகிய சுக்கிரீவன்; எவ்வழி இருந்தான் - எவ்விடத்தில் உள்ளான்? யாங்கள் - நாங்கள்; அவ் வழி அவனைக் காணும் - அவ்விடத்திற்குச் சென்று அவனைக் காணும்; அருத்தியால் - விருப்பத்தோடு; அணுக வந்தேம் - அவனைச்சார வந்தோம்; இவ்வழி- இந்த இடத்தில்; நின்னை உற்ற எமக்கு- உன்னை எதிர்ப்பட்ட எங்களுக்கு; நீ இன்று சொன்ன - நீ இப்போது கூறிய; செவ்வழி உள்ளத்தோனை - செந்நெறியில் செல்லும் உள்ளம் உடைய சுக்கிரீவனை; தெரியக் காட்டுதி - (நாங்கள் தெரிந்து கொள்ளுமாறு) காட்டுவாயாக''; என்றான் - என்று கூறினான். அனுமன் தன் தலைவனைப் 'பரிதிச் செல்வன் செம்மல்' (3766) என்று குறிப்பிட, இராமன் 'கவிக்குலத்து அரசன்' எனச் சுக்கிரீவன் பெருமை தோன்றப் பேசினான். அரசனாதலின் அவன் இருக்கும் இடத்தில் சென்று காண்பதே முறையாதலின் 'செவ்வழி உள்ளத்தோனைத் தெரியக் காட்டுதி' என்றான். 20 |