அனுமன் விடை 3771. | 'மாதிரப் பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில், மற்றுப் பூதரப் புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே? ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின், அன்னான், தீது அவித்து அமையச் செய்த, செய் தவச் செல்வம் நன்றே! |
மாதிரப் பொருப்போடு - திசைகளின் எல்லைகளில் உள்ள சக் கரவாளகிரி என்னும் மலையோடு; ஓங்கு- உயர்ந்து; வரம்பு இலா உலகில்- எல்லையில்லாமல் விரிந்து கிடக்கும் உலகத்தில்; பூதரப் புயத்து வீரர் - பூமியைத் தாங்கும் மலைபோன்ற (உலகத்தைத் தாங்கும்) தோள்களையுடைய வீரர்களாகிய; நும் ஒக்கும் - உங்களை ஒத்து விளங்கும்; புனிதர் யாரே - தூயவர் வேறு யாருளர்? (எவருமிலர்); அவனை ஆதரித்து - அச்சுக்கிரீவனிடத்து அன்பு காட்டி; காண்டற்கு அணுகினிர் என்னின் - அவனைக் காண்பதற்க நீங்கள் இங்கு வந்தீர்கள் என்றால்; அன்னான் - அச்சுக்கிரீவன்; தீது அவித்து - தீமைகளைச் செய்யும் ஐம்பொறிகளை அடக்கி; அமையச் செய்த - பொருத்தமுறச் செய்த; செய்தவச் செல்வம் - செய்தவமாகிய செல்வம்; நன்றே - சிறப்புடையதாகும். மாதிரப் பொருப்பு என்றது, சக்கரவாளகிரியை. திசைகளின் எல்லையில் இருப்பதால் அப்பெயர்பெற்றது. பூதரம் - மலை, பூமியைத் தாங்குவது என்ற காரணம் பற்றி வந்தது. வலிமையினாலும், உயர்வாலும், நில உலகை நிலை பெறச் செய்தலினாலும் மலை தோள்களுக்கு உவமை ஆயிற்று. வாலியினை வெல்ல வேண்டும் என்ற நோக்கம் உடையவன் ஆதலின் தோளின் பெருமையை அனுமன் பேசினான். புனிதர் யாரே - ஏகாரம் எதிர்மறை. பெருந்தவம் செய்திருந்தாலன்றி இராமபிரானைக் காணும் பேறு பெறாமையின் 'தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே'என்றான். 21 |