3773. | 'ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி தொடங்கி, மற்றும், முற்றத் தொல் அறம் துணிவர் அன்றே; கொடுங் குலப் பகைஞன் ஆகிக் கொல்லிய வந்த கூற்றை நடுங்கினர்க்கு, அபயம் நல்கும் அதனினும், நல்லது உண்டோ? |
ஒடுங்கல் இல் - கருங்குதல் இல்லாது விரிந்துள்ள; உலகம் யாவும்- உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம்; உவந்தன உதவி - விரும்பியனவற்றைத் தானம் செய்து; தொடங்கின வேள்வி - தொடங்கின யாகங்களையும்; மற்றும்- மற்றுமுள்ள தவம் முதலியவற்றையும்; முற்ற - நிறைவேற்ற; தொல்அறம் துணிவர் அன்றே- (சான்றோர்கள்) தொன்று தொட்டு வரும் அறங்களைச் செய்யத் துணிவார்கள் அல்லவா? கொடுங்குலப் பகைஞன் ஆகி- தன் குலத்திற்கே கொடிய பகைவனாகி; கொல்லிய வந்த - கொல்வதற்காக வந்த; கூற்றை - யமன் போன்ற பகைவனை எண்ணி; நடுங்கினார்க்கு- அஞ்சியவர்களுக்கு; அபயம் நல்கும் அதனினம் - 'அஞ்சாதே' என அபயம் கொடுக்கும் அறத்தைக் காட்டிலும்; நல்லது உண்டோ - மேம்பட்டதோர் அறம் உண்டோ? (இல்லை). வேள்வி முதலாய பல்வேறு அறங்களுள், அஞ்சிச் சரண் அடைந்தவர்களுக்கு அபயம் அளிப்பதே சிறந்த அறம் ஆதலால் சுக்கிரீவனுக்கு அபயம் அளித்து அருளுதல் வேண்டும் என்பது அனுமனின் வேண்டுகோளாகும். 'உடைந்தவர்க்கு உதவானாயின், உள்ளதொன்றீயானாயின் அடைந்தவர்க்கு அருளானாயின், அறம் என்னாம்? ஆண்மை என்னாம்?'' (6472) என்ற இராமன் கூற்று ஒப்பு நோக்கத்தக்கது. அபயம் - பயம் இல்லாது செய்தல் கொல்லிய - செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; கூற்று - உவமைஆகுபெயர். 23 |