3774.''எம்மையே காத்திர்'' என்றல் எளிது
     அரோ? இமைப்பு இலாதோர் -
தம்மையே முதல் இட்டு, ஆன்ற
     சராசரம் சமைந்த ஆற்றல்
மும்மை ஏழ் உலகும் காக்கும்
     முதல்வர் நீர்; முருகற் செவ்வி
உம்மையே புகல் புக்கேமுக்கு, இதின்
     வரும் உறுதி உண்டோ?

     இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு- கண்கள் இமைத்தல்
இல்லாத தேவர்களை முதலாகக் கொண்டு; ஆன்ற சராசரம் - உயர்ந்த
அசையும் பொருள்களையும் அசையாப்பொருள்களையும்; சமைந்த ஆற்றல் -
படைத்த ஆற்றலை உடைய; மும்மை ஏழ் உலகும் காக்கும் - மூன்று
வகைப்பட்ட ஏழு உலகங்களையும் பாதுகாக்கும்; முதல்வர் நீர் - தலைவர்
நீங்கள் (ஆதலால்); எம்மையே காத்திர் - எளியராகிய எங்களைமாத்திரமே
காப்பாற்றுவீர்; என்றல் - என்று கூறுதல்; எளிது - (உங்களுக்கு) எளிமைத்
தன்மையைக் கற்பிப்பது ஆகும்; முருகற் செவ்வி- முருகனைப் போன்ற
சிறப்பினை உடைய; உம்மையே புகல்புக்கேமுக்கு- உங்களையே
புகலிடமாகக் கொண்டு அடைக்கலம் அடைந்த எங்களுக்கு; இதின் வரும்
உறுதி உண்டோ -
இதைக் காட்டிலும் வந்தடையக்கூடிய நன்மை வேறு
உளதோ? (இல்லை),

     இராமலக்குவரின் சிறப்பை அறிந்து, அவர்தம் ஆற்றலைப்புகழ்ந்து
பேசித் தமக்கு அடைக்கலம் கொடுத்துக் காக்குமாறு அனுமன் வேண்டினான்.
முருகன் - முருகை உடையவன்; அழகும் இளமையும் தெய்வத் தன்மையும்
உடையவன். எம்மையே தம்மையே - ஏகாரங்கள் பிரிநிலை; அரோ -
அசைநிலை.                                                   24