இலக்குவன் தங்கள் நிலையை அனுமனுக்கு உரைத்தல்

3775.'யார் என விளம்புகேன் நான்,
     எம் குலத் தலைவற்கு, உம்மை?
வீர! நீர் பணித்திர்! ' என்றான்,
     மெய்ம்மையின் வேலி போல்வான்;
வார்கழல் இளைய வீரன்,
     மரபுளி, வாய்மை யாதும்
சோர்வு இலன், நிலைமை
     எல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான்:

     மெய்ம்மையின் வேலி போல்வான் - மெய்ம்மையைப் பாதுகாக்க
அமைந்த வேலி போல்பவனாகிய அனுமன், (இராமலக்குவரைப் பார்த்து);
வீர- 'வீரர்களே!எம்குலத்தலைவற்கு - எங்கள் குலத் தலைவனாகிய
சுக்கிரீவனுக்கு; உம்மை நான் - உங்களை நான்; யார் என விளம்புகேன்-
யாவர் என்று சொல்வேன்? நீர்பணித்திர் - நீங்கள் சொல்லுங்கள்';
என்றான்- - ; வார்கழல் இளையவீரன் - நீண்ட வீரக்கழல் அணிந்த
இளையவீரனாகிய இலக்குவன்; மரபுளி - முறைப்படி; வாய்மை யாதும் -
உண்மைநிகழ்ச்சிகள் யாவற்றையும்; சோர்வு இலன்- சோர்வு
இல்லாதவனாய்; நிலைமை எல்லாம் - தங்களுக்கு நேர்ந்த நிலைமை
களையெல்லாம்; தெரிவுறச் சொல்லலுற்றான் - நன்றாய் விளங்குமாறு
சொல்லத்தொடங்கினான்.

     'நீங்கள் யார்'? என வினவாமல் 'யாரென விளம்புகேன் நான் என்
குலத்தலைவற்கு உம்மை' என்ற தொடரால் அனுமன் வினவியது. அனுமனின்
அடக்கத்தை நாகரிகமாய் விளக்குதல் காணலாம்; எப்போதும் உண்மையே
பேசுபவன் ஆதலின் மெய்ம்மை காப்பதற்கு அவதரித்த இராமபிரானுக்குக்
காவல் ஆவான் என்பது தோன்ற, அனுமன் 'மெய்ம்மையின் வேலி
போல்வான்' எனப்பட்டான்.  உளி - மூன்றாம் வேற்றுமைப் பொருளில்
வந்தது.  நாடு நீங்கியது, சீதையை இழந்தது என எல்லா நிகழ்ச்சிகளையும்
விடாது உரைத்தனன் ஆதலின் 'வாய்மை யாதும் சோர்விலன் நிலைமை
எல்லாம் தெரிவுற' என்றார். விளக்கமாகக் கூறியதைத் 'தெரிவுற' என்ற சொல்
புலப்படுத்தும். விளம்புகேன் - ககர ஒற்று இடைநிலை - எதிர்காலம்
காட்டியது. குகனுக்கும் சடாயுவிற்கும் இலக்குவனே தம் வரலாறு கூறியது
இங்கு நினைக்கத் தகும்.                                         25