3776. | 'சூரியன்மரபில் தோன்றி, சுடர் நெடு நேமி ஆண்ட ஆரியன்; அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட வீரியன்; வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட காரியன்; கருணை அன்ன கண்ணன் அக் கவிகை மன்னன்; |
'அக் கவிகை மன்னன் - அந்த வெண்கொற்றக் குடையை உடைய அரசன்; சூரியன் மரபில் தோன்றி- சூரிய குலத்தில் தோன்றி; சுடர் நெடு நேமி - ஒளி மிகுந்த பெரிய ஆணைச் சக்கரத்தை உடையவனாய்; ஆண்ட ஆரியன்- உலக முழுவதும் ஆட்சி செலுத்திய உயர்ந்தோன்; அமரர்க்காக- தேவர்கள் பொருட்டு; அசுரரை ஆவி உண்ட - சம்பரன் முதலிய அசுரர்களை வென்று உயிரைப் பறித்த; வீரியன் - வீரம் உடையவன்; வேள்வி செய்து - பல வேள்விகளைச் செய்து; விண் உலகோடும் ஆண்ட- மண்ணுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆட்சி புரிந்த; காரியன்- செயல்திறம் படைத்தவன்; கருணை அன்ன - அருளே வடிவு எடுத்தாற்போன்ற; கண்ணன் - கண்ணோட்டம் உடையவன்; அக்கவிகை மன்னன். . . . . தயரதன் என அடுத்த செய்யுளில் முடியும். தேவர் வேண்ட, சம்பரன் முதலிய அசுரர்களை வென்று மீட்ட விண்ணுலகத்தைத் தயரதன் இந்திரனுக்குக் கொடுத்த சிறப்புப் பற்றி 'விண்ணுலகோடும் ஆண்ட' எனப்பட்டான். இச் செய்தி 'இன்தளிர்க் கற்பக நறுந்தேன்' எனத் தொடங்கும் பாடலிலும் (322) விசுவாமித்திரரால் உணர்த்தப்பட்டது. கண்ணன் என்றது இங்குக் கண்ணோட்டத்தைக் குறிக்கும். நேமி - சக்கரம் ஆணையைச் சக்கரமாகக் குறிப்பது மரபு. கவிகை - கவிந்திருப்பது; காரணப்பெயர். 26 |