3778.'அன்னவன்சிறுவனால், இவ்
     ஆண்தகை; அன்னை ஏவ,
தன்னுடைய உரிமைச் செல்வம்
     தம்பிக்குத் தகவின் நல்கி,
நல் நெடுங் கானம் சேர்ந்தான்;
     நாமமும் இராமன் என்பான்;
இந் நெடுஞ் சிலைவலானுக்கு ஏவல்
     செய் அடியென் யானே.'

     இவ் ஆண்தகை- இந்த வீரர்களிற் சிறந்தவன்; அன்னவன்
சிறுவன்-
அந்தத் தயரத சக்கரவர்த்தியின் மகனாவான்; அன்னை ஏவ- தன்
சிற்றின்னையின் கட்டளையால்; தன்னுடைய உரிமைச் செல்வம் - மூத்த
மகனாகிய தனக்கு உரிமையுடைய ஆட்சிச் செல்வத்தை; தம்பிக்குத் தகவின்
நல்கி -
தன் தம்பியாகிய பரதனுக்குப் பெருந்தன் மையோடு கொடுத்து விட்டு;
நல்நெடுங் கானம் -
நல்ல நெடிய காட்டை; சேர்ந்தான் - அடைந்தான்;
நாமமும் இராமன் என்பான்-
பெயரும் இராமன் எனப்படுபவன்; இந்நெடும்
சிலை வலானுக்கு -
இது நீண்ட வில்லாற்றால் பொருந்தியவனுக்கு; ஏவல்
செய் -
குற்றேவல் செய்கின்ற; அடியென் யானே - அடியவன் யான்'

     இம்மூன்று பாடல்களால் தன் தமையனைப் பற்றியும் தன்னைப் பற்றியும்
உணர்த்தினான் இலக்குவன்.  இராமன் புருடோத்தமன் என்ற கருத்தை
'ஆண்டகை' என்ற சொல் உணர்த்துகிறது.  அன்னை - சிற்றன்னையாகிய
கைகேயி.  தந்தையின் விருப்பத்தால் அன்று, தாய் உரைத்த உரையால
நிகழ்ந்தது என்பதைப் புலப்படுத்த 'அன்னை ஏவ' என்றான்.  'தரையளித்த
தனி நேமித் தயரதன் தன் புதல்வர் யாம்; தாய் சொல் தாங்கி விரை யளித்த
கான்புகுந்தேம் (2867) என இரரமன் முன்னர் உரைத்ததையும் காண்க.
மூத்தவர்க்கு உரித்து அரசு என்பதால் 'தன்னுடைய உரிமைச் செல்வம்'
என்றான்.  தம்பி - பரதன். கடத்தற்கரிய பெரிய கானமாதலின் 'நெடுங்கானம்'
என்றும் முனிவர்கள் வாழும் கானமாதலின் 'நற்கானம்' எனவும் உரைத்தனன்.
தன்னை இராமனின் தம்பி என்னாது 'ஏவல் செய்அடியென்' என்கிறான்.
'மகனே இவன்பின் செல், தம்பி என்னும் படி அன்று, அடியாரின் ஏவல்
செய்தி' (1752) எனச் சுமத்திரை கூறியாங்கு இலக்குவன் நடந்துகொள்வதைக்
காண்கிறோம்.                                                 28