இராமன் திருவடிகளை அனுமன் வணங்குதல்

3779.என்று,அவன் தோற்றம் ஆதி
     இராவணன் இழைத்த மாயப்
புன்தொழில் இறுதி ஆக,
     புகுந்த உள பொருள்கள் எல்லாம்,
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல்,
     உணர்த்தினன்; உணர்த்தக் கேட்டு
நின்ற அக்காலின் மைந்தன், நெடிது
     உவந்து, அடியில் தாழ்ந்தான்.

     என்று - என்று இவ்வாறு; அவன் தோற்றம் ஆதி - இராமபிரானின்
பிறப்பு முதல்; இராவணன் இழைத்த- இராவணன் செய்த; மாயப்
புன்தொழில் இறுதி ஆக -
வஞ்சனையாகிய கீழ்த்தரமான செயல் ஈறாக;
புகுந்து உள பொருள்கள் எல்லாம் -
நடந்துள்ள செய்திகளையெல்லாம்;
ஒன்றும் ஆண்டு ஒழிவு உறாமல் -
எந்த ஒரு நிகழ்ச்சியும் விடுபட்டுப்
போகாமல்; உணர்த்தினன் - எடுத்துரைத்தான்; உணர்த்த - அவ்வாறு
சொல்ல; கேட்டு நின்ற- கேட்டுக் கொண்டு நின்ற; அக்காலின் மைந்தன்-
காற்றின் மைந்தனாகிய அந்த அனுமான்; நெடிது உவந்து- பெரிதும்மகிழ்ந்து;
அடியில் தாழ்ந்தான் -
இராமபிரான் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.

     இராவணன் இழைத்த மாயப் புன்தொழில் - வஞ்சனையால் சீதையைக்
கவர்ந்த செயல்.  சீதையைக் கவர்ந்த செயலைக் கூறவும் விரும்பாததால்
கம்பர் 'மாயப்புன் தொழில்' எனக் குறித்தார். இலக்குவன் கூறிய வரலாற்றால்
இராமன் வணங்கத்தக்க குணங்களை உடையவன் என அனுமன் அறிந்ததால்
நெடிது மகிழ்ந்து அவனது திருவடிகளில்வணங்கினான்.               29