'மறைவனாகிய அனுமன் வணங்குவது முறையோ'? என்ற இராமனுக்கு அனுமன் மறுமொழி 3780. | தாழ்தலும்,'தகாத செய்தது என்னை, நீ? தருமம் அன்றால்; கேள்வி நூல் மறைவலாள!' என்றனன்; என்னக் கேட்ட பாழி அம் தடந் தோள் வென்றி மாருதி, 'பதுமச் செங்கண் ஆழியாய்! அடியனேனும் அரிக் குலத்து ஒருவன்' என்றான். |
தாழ்தலும் - (அனுமன் தன்னை) வணங்கிய அளவில்; கேள்வி நூல் மறை வலாள - (இராமன் அனுமனை நோக்கி) கேட்டறிந்த சாத்திரங்களிலும் வேதங்களிலும் வல்ல அந்தணனே! நீ - - ; தகாத செய்தது என்னை?- செய்யத்தகாத காரியத்தைச் செய்தது ஏன்? தருமம் அன்று - (அந்தணன் அரசனை வணங்குதல்) தருமம் அன்று; என்றனன் - என்று கூறினனாக; என்னக் கேட்ட - அவ்வாறு கூறியதைக் கேட்ட; பாழி அம் தடந்தோள்- வலிமையான அழகிய பெரிய தோள்களை உடைய; வென்றி மாருதி - வெற்றிமிக்க அனுமன்; பதுமச் செங்கண் ஆழியாய் - 'செந்தாமரை மலர்போன்ற சிவந்த கண்களையும் ஆணைச் சக்கரமும் உடையவனே! அடியனேனும் - அடியனாகிய யானும்; அரிக்குலத்து ஒருவன் - குரங்குக் குலத்தில் தோன்றிய ஒருவனே யாவேன்; என்றான் - என்று கூறினான். நால்வகை வருணத்தோருள் அந்தணர் உயர்ந்தோராகக் கருதப்பட்டதால் அந்தணனாகிய அனுமன் அரசனாகிய தன்னை வணங்குதல் தகாது; தருமம் ஆகாது என்றனன் இராமன். அனுமன் அந்தணன் வேடத்தில் இருந்தமையால் இராமன் இங்ஙனம் கூறினான். கேள்வி நூல் - வேதம்; சுருதி. செவி வழியாக மட்டும் கேட்கப்படுதலின் வேதத்தைக் கேள்வி நூல் என்பது பழ மரபு. கேட்டற்கரிய நூற்பொருளைக் கற்றறிந்தார் வழிக்கேட்டலும் ஆம். 'கற்றிலனாயினும் கேட்க' என்றார் வள்ளுவரும். (குறள். 414). மறை - வேதம். மருத்துவின் மகனாதலின் 'மாருதி' என்பது அனுமன் பெயராயிற்று. ஆழியாய் - ஆணைச் சக்கரம் உடையவனே என்பது பொருள். தயரத சக்கரவர்த்தியின் மகனாதலின் காடாளும் இராமனை இங்ஙனம் அனுமன் விளித்தான். அடியேன் தானும் - உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. சுக்கிரீவனே அன்றி யானும் எனப் பொருள்படும். ஆல் - அசை. 30 |