அனுமன் தன் பெரிய வானர உருவத்துடன் நிற்றல் 3781. | மின்உருக் கொண்ட வில்லோர் வியப்புற, வேத நல் நூல் பின் உருக்கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ, பொன் உருக் கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத் தன் உருக்கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான். |
தருமத்தின் தனிமை தீர்ப்பான்- (துணையின்றி வருந்தும்) தருமத்தின் தனிமையைப் போக்க வந்தவனாகிய அனுமன்; மின் உருக் கொண்ட - மின்னலின் வடிவத்தைத் தன்பால் கொண்டாற்போன்ற ஒளிபொருந்திய; வில்லோர் வியப்புற- வில்லேந்திய இராமலக்குவர் வியப்படையுமாறு; வேத நல்நூல் - வேதம் முதலான சாத்திரங்களே; பின் உருக் கொண்டது என்னும் - பின்னர் ஒரு வடிவம் எடுத்து வந்தது என்று; பெருமை ஆம் பொருளும் தாழ - சிறப்பித்துச் சொல்லும் பாராட்டுரையும் சிறுமையுறும்படி; பொன் உருக் கொண்ட மேரு - பொன் மயமான வடிவங் கொண்ட மேருமலையும்; புயத்திற்கு உவமை போதா - தன் தோள்களுக்கு உவமையில் ஒப்பாகாத; தன் உருவக்கொண்டு நின்றான் - தன்னுடைய பேருருவத்தைக் கொண்டு நின்றான். 'இவர்களோ தருமம் ஆவார்' (3762) என்ற தொடர்களில் இராமலக்குவர் குறிக்கப்பட்டனர். அவர்களின் தனிமை தீர்ப்பவன் ஆதலின், அனுமன் தரு மத்தின் தனிமை தீர்ப்பான் ஆயினான். அரக்கர்களால் அழிய இருந்த தருமம் அனுமன் உதவியால் நிலைபெறும் என்பதால் 'தருமத்தின் தனிமை தீர்ப்பான்' என்றும் விளக்கலாம். அனுமன் தருமத்திற்குத் துணையாவன் என்பதை 'மெய்ம்மையின் வேலி போல்வான்'' (3775), அறத்துக்கு ஆங்கொரு தனித்துணையென நின்ற அனுமன். (5804) என்ற அடிகளாலும் உணரலாம். அனுமன் தான் வானர குலத்தைச் சார்ந்தவன் என உரைத்ததும், தன்னிடத்தில் அவர்களுக்கு மதிப்பு உண்டாகுமாறு தன் பேருருவம் எடுத்து நின்றனன். அவன் வேத நன்னூல்களே ஓர் உருக்கொண்டு வந்தது போன்றவன் என்றால், அவ்வுரை தாழ்வுடைத்து என்பதாம். இதனால் அவன் வேத சாத்திரங்களிலும் மேம்பட்ட ஞானி ஆவான் என்க. 'தன்னுரு' என்றமையால் அப்பேருருவமே அனுமனுக்குரிய உருவம் எனவும் கொள்ளத்தகும். 31 |