3782.கண்டிலன்,உலகம் மூன்றும்
     காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன்,
     பொலன் கொள் சோதிக்
குண்டல வதனம் என்றால்,
     கூறலாம் தகைமைத்து ஒன்றோ,
பண்டை நூல் கதிரோன் சொல்ல,
     படித்தவன் படிவம்? அம்மா!

     உலகம் மூன்றும் - விண், மண், பாதாளம் என்னும் மூன்று
உலகங்களையும்; காலினால் கடந்து கொண்ட - (திரிவிக்கிரம அவதாரத்
தில்) தனது திருவடியால் அளந்து தனதாக்கி்க்கொண்ட; புண்டரீகக் கண் -
தாமரை மலர் போன்ற கண்களையும்; ஆழி - சக்கரப் படையையும் உடைய;
புரவலன்-
காத்தற்கடவுளாகிய திருமாலின் அமிசமான இராமபிரான்; பொலன்
கொள் சோதி -
பொன்னாலாகிய ஒளி பொருந்திய; குண்டல வதனம் -
குண்டலங்களை அணிந்த (அனுமனின்) முகத்தை; கண்டிலன் என்றால் -
காண முடியாதவன் ஆனான் என்றால்; பண்டை நூல் - பழமையான
இலக்கணம் முதலிய நூல்களை; கதிரோன் சொல்ல - சூரியன் கற்பிக்க;
படித்தவன் படிவம்
- கற்றவனான அனுமனின் பேருருவம்; கூறலாம்
தகைமைத்து ஒன்றோ -
இத்தன்மைத்து என ஒருவரால் கூறத்தக்க
தன்மையுடைய தொன்று ஆகுமோ? (ஆகாது)

     முன்பு திரிவிக்கிரமனாக வடிவங்கொண்ட திருமாலான இராமபிரானே
அனுமானின் முகத்தைக் காண இயலவில்லையெனில், அப்பேருருவத்தின்
பெருமையைக் கூற எங்ஙனம் இயலும் என்பது கருத்து. திரிவிக்கிரமனாக
உலகளந்த திருமாலே இராமனாக வந்துள்ளமையால் 'உலக மூன்றும் காலினால்
கடந்து கொண்ட புண்டரிகக் கண் ஆழிப் புரவலன்' என்றார்.  ''மூவுலகும்
ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி'' எனச் சிலப்பதிகாரம்
(ஆய்ச்சியர் குரவை) உலகளந்த செய்தியைக் கூறுகிறது. கதிரவனின்
மாணவனாய், அவனை நெருங்கிப் பாடம் கேட்கும் பெரும் வடிவுடையனாய்
விளங்கிய தன்மை புலப்படக் 'கதிரோன் சொல்லப் படித்தவன் படிமம்'
என்றார்.

     அம்மா - வியப்பிடைச்சொல்.  அனுமனின் பேருருவ (விசுவரூப)
வர்ணனையைச் சுந்தரக்காண்டத்தும் (5326 - 5332) காணலாம்.          32