சுக்கிரீவனை அழைத்துவர, அனுமன் விடைபெற்றுச் செல்லுதல் 3785. | என்று,அகம் உவந்து, கோல முகம் மலர்ந்து, இனிதின் நின்ற குன்று உறழ் தோளினாரை நோக்கி, அக் குரக்குச் சீயம், 'சென்று, அவன் தன்னை, இன்னே கொணர்கின்றேன்; சிறிது போது, வென்றியிர்! இருத்திர்' என்று விடைபெற்று, விரைவில் போனான். |
என்று - என்று சொல்லி; அகம் உவந்து- மனம் மகிழ்ந்து; கோல முகம் மலர்ந்து - (அதனால்) அழகிய முகமும் மலர்ச்சி பெற்று; இனிதின் நின்ற - மகிழ்ச்சியோடு இருந்த; குன்று உறழ் தோளினாரை நோக்கி - மலைபோன்ற தோள்களை உடைய இராமலக்குவரை நோக்கி; அக்குரக்குச் சீயம் - அந்த அனுமனாகிய சிங்கம்; வென்றியிர் - வெற்றியை உடையவர்களே!சென்று அவன் தன்னை - யான் சென்று சுக்கிரீவனை; இன்னே கொணர்கின்றேன் - இப்பொழுதே அழைத்துக் கொண்டு வருகின்றேன்; சிறிது போது இருத்திர் - சிறிது நேரம் இங்கே இருங்கள்; என்று விடைபெற்று- என்று கூறி, அவர்கள் பால் விடை பெற்றுக்கொண்டு; விரைவில் போனான் - விரைந்து சென்றான். ஆண்களில் சிறந்தோனை ஆண்சிங்கம் என்பது போலக்குரங்கினத்தில் சிறந்தோனாகிய அனுமனைக் 'குரக்குச் சீயம்' என்றார். சீயம் - சிங்கம். சீயம்- ஸிம்ஹம் என்னும் வடசொல்லின் திரிபு. தோற்றத்தால் குரங்காக இருப்பினும்நோக்கத்தில் சிங்கம் போல்வானாதலின் குரக்குச் சீயமானான் எனலாம்.முன்னும் பின்னும் நோக்கும் சிங்கம் போல அனுமனும் இராமலக்குவரின்வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளையும், நடைபெற உள்ளனவற்றையும் நோக்கி,அவர்களால் தமக்கு வரும் நன்மைகளை ஆராய்ந்து சுக்கிரீவனை நட்புக்கொள்ளச் செய்த திறம் புலனாகிறது. 'வென்றியிர்!' என அவன் விளித்தலில்வாலியை வெல்லும் திறமும் அடங்கியுள்ளது. நட்பாக்கிக் கொள்ளும்ஆர்வத்தை 'விரைவில் போனான்' என்ற தொடர் உணர்த்துகிறது. 35 |