3789.'சூழிமால் யானையார்
     தொழு கழல் தயரதன்,
பாழியால் உலகு எலாம் ஒரு
     வழிப் படர வாழ்
ஆழியான், மைந்தர்; பேர்
     அறிவினார்; அழகினார்;
ஊழியார்; எளிதின் நிற்கு
     அரசு தந்து உதவுவார்.

     பாழியால் - தன் வலிமையால்; உலகு எலாம்- எல்லா உலகங்களும்;
ஒரு வழிப் படர-
தன் ஒரு குடைக்கீழ் நடக்க; வாழ் ஆழியான் - ஆட்சி
செய்து வாழும் ஆணைச்சக்கரத்தை உடையவனும்; சூழிமால் யானையார் -
முகபடாம் அளிந்த யானைப்படையை உடைய அரசர்கலெல்லாம்; தொழு
கழல் தயரதன் -
வந்து தொழுகின்ற கழல் அணிந்த அடிகளையும்
உடையவனான தசரதனின்; மைந்தர் - புதல்வர்கள்;  பேர் அறிவினார் -
பேரறிவினையுடையவர்கள்; அழகினார் - பேரழகு உடையவர்கள்; ஊழியால்
எளிதின் -
முறைமையாக எளிதில்; நிற்கு அரசு தந்து - உனக்கு
அரசாட்சியை அளித்து; உதவுவார் - உதவி செய்வார்கள்.

     நால்வகைப்படையில் யானைப்பபடையே சிறந்தது ஆதலின் 'யானையார்'
எனக் கூறப்பட்டது.  எனினும் இனம்பற்றித் தேர், குதிரை, காலாட்படையும்
அடங்கும்.  தயரதன் அரசர்கள் வணங்கும் கழல்களை உடையவன்.
''திறையோடும் அரசு இறைஞ்சும் செறிகழற்கால் தசரதன்'' (660), என்று
முன்னர்க் கூறியது காண்க.  தோள் வலிமையால் சம்பரனை வென்று
விண்ணுலகையும் தன்னடிப்படுத்தி ஆண்டமையால் 'உலகெலாம்' என்றான்.
தன் ஆணையின் கீழ் நிற்க ஆள்வதே 'ஒரு வழிப்படர்'தலாகும்.  'கோவுடை
நெடுமணி மகுடகோடியால், சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால்'. (175)
என்ற அடியால் தயரதன் உலகமுழுதுடையான் என்பதை உணர்த்தும்.

     இராமலக்குவரின் பேரழகினை 'உலகொடு மூன்றும் தம்  உடைமை
ஆக்குறும், அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர்' (2703) என்று
சடாயுவும், 'எழுத அரு மேனியாய்' (2779) என்று சூர்ப்பணகையும் ''ஓவியத்து
எழுத ஒண்ணா உருவத்தாய்'' (4020) என்று வாலியும் பேசும் இடங்கள்
ஒப்புநோக்கத்தக்கன.  வாலியைக் கொன்று அரசளிப்பது இராமலக்குவர்க்கு
அரிய செயலன்று என்பதால் 'எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்'
என்றான்.

     இராமலக்குவரின் குலச்சிறப்பும், அறிவும், அழகும் ஆற்றலும்
கூறப்பட்டுச் சுக்கிரீவன் அடையக்கூடிய பயனும் உணர்த்தப்படுகிறது.
சுக்கிரீவன் குறிக்கோள் அரசு பெறுதல் ஆதலின் அவன் அடையும்
பயனாக 'அரசு'வலியுறுத்திக் கூறப்பட்டது.                           4