3791.'வேல் இகல் சினவு தாடகை
     விளித்து உருள, வில்
கோலி, அக் கொடுமையாள் புதல்வனைக்
     கொன்று, தன்
கால்இயல் பொடியினால், நெடிய
     கற் படிவம் ஆம்
ஆலிகைக்கு, அரிய பேர்
     உரு அளித்தருளினான்.

     வேல் இகல் சினவு தாடகை - (அவ்விருவருள் முன்னவனாம்
இராமன்) சூலாயுதத்தை ஏந்தி மாறுபட்டவளாய்ச் சினந்து வருகின்ற தாடகை;
விளிந்து உருள -
இறந்து தரையில் உருளுமாறு; வில் கோலி - வில்லை
வளைத்து; அக்கொடுமையாள்- அக்கொடியவளின்; புதல்வனைக் கொன்று-
மகனான சுபாகுவைக் கொன்று; தன்கால் இயல் பொடியினால்- தன்
கால்களில் பொருந்திய தூளியினால்; நெடிய கல் படிவம் ஆம்- நீண்ட கல்
வடிவமாகக்கிடந்த; ஆலிகைக்கு - அகலிகைக்கு; அரிய பேர் உரு -
பெறுதற்கரிய சிறந்த உருவத்தை; அளித்து அருளினான்- கொடுத்து அருள்
செய்தான்.

     'நல்லுறுப்பு அமையும் நம்பியரில் முன்னவர்' என அடுத்த பாடலில்
வருவது இடைநிலை விளக்காய் இப்பாடலுக்கு எழுவாயாய் நின்றது.       6