3795. | 'கரன் முதல் கருணை அற்றவர், கடற்படையொடும் சிரம் உகச் சிலை குனித்து உதவுவான்; திசை உளார் பரம் உகப் பகை துமித்தருளுவான்; பரமர் ஆம் அரன் முதல் தலைவருக்கு அதிசயத் திறலினான்; |
கரன் முதல் கருணை அற்றவர் - (இந்த இராமன்) கரன் முதலான இரக்கமற்ற அரக்கர்களுடைய; கடற் படையொடும் - கடல் போன்ற பதினாலாயிரம் படை வீரர்களோடும்; சிரம் உக - (அவர்கள்) தலைகள் சிதறி விழ; சிலை குனித்து - வில்லை வளைத்து; உதவுவான் - (முனிவர்க்கு) உதவி செய்தவனாவான்; திசை உளார் - இந்திரன் முதலிய திசை காப்பவர்களின்; பரம் உக - துன்பச் சுமை குறையுமாறு; பகை துமித்தருளுவான்- (அறத்திற்குப்) பகையாய் உள்ளவர்களை அழித்து அருளுவான்; பரமர் ஆம் - மேம்பட்டவர்களாகிய; அரன் முதல் தலைவருக்கு- சிவபிரான் முதலான தேவர்களுக்கும்; அதிசயத் திறலினான்- வியக்கத்தக்க வலிமையுடையவனுமாவான். கரன் - கடுமை உள்ளவன் என்பது பொருள். 'கரன் முதல் கருணை அற்றவர்' என்பது - தூடணன், திரிசிரசு என்னும் இருவரையும் உள்ளடக்கிய அரக்கர் கூட்டம் ஆம். அரக்கர் கருணையற்றவர் என்பதை 'இரக்கம் என்றொரு பொருள் இலாத நெஞ்சினர் அரக்கர்' (2642) என்ற அடியும் உணர்த்தும். இந்திரன் முதலிய திசைக் காவலர் இராவணனால் படும் துன்பமிகுதி தோன்றப் 'பரம்' என்றான். பாரம் - பரம் எனக் குறுகியது. இராமன் 'அரன் முதலான தேவர்களினும் மேம்பட்ட திறல் உடையவன் என்பதால் 'அதிசயத் திறலினான்' என்றான். 'சூரறுத்தவனும் சுடர்நேமியும், ஊரறுத்த ஒருவனும் ஓம்பினும் . . . . . வேரறுப்பென் வெருவன்மின்' (2652) என இராமனே கூறியுள்ளது காண்க. கடற்படை - உவமை. அறத்திற்குப் பகையாய் உள்ளவர்களை அழிக்கவல்ல பேராற்றல் படைத்தவன் இராமன் என்பதை உணர்த்தி, அறத்திற்குப் பகையான வாலியை அழிப்பதும் உறுதி என்பதைச் சுக்கிரீவனுக்குப்புலப்படுத்தினான். 10 |