3797. | உக்கஅந்தமும், உடல் பொறை துறந்து உயர் பதம் புக்க அந்தமும், நமக்கு உரை செயும் புரையவோ - திக்கு அவம் தர, நெடுந் திரள் கரம், சினவு தோள், அக் கவந்தனும், நினைந்து அமரர் தாழ் சவரிபோல்? |
திக்கு அவம் தர - எல்லாத் திசைகளிலும் உள்ள உயிர்களெல்லாம் அழிவு அடையும்படி; நெடும் திரள் கரம் - நீண்ட திரண்ட கைகளையும்; சினவு தோள் - சினந்து பாய்கின்ற தோள்களையும் உடைய; அக்கவந்தனும் - அந்தக் 'கவந்தன்' என்னும் அரக்கனும்; உக்க அந்தமும் - (இவர்கள் கையால்) இறந்துபட்ட முடிவும்; உடல்பொறை துறந்து - (பின்னர்) நிலத்திற்குச் சுமையான தன் உடலை விட்டு; சவரி போல் - சபரி என்பவளைப் போல; நினைந்து அமரர் தாழ் - தேவர்களெல்லாம் மதித்து வணங்குகிற; உயர்பதம் புக்க அந்தமும் - உயர்ந்த பரமபதத்தை அடைந்த அழகும்; நமக்கு - எம் போல்வாருக்கு; உரை செயும் புரையவோ - சொல்லத்தகும் தன்மையை உடையனவோ? இராமன் வீரத்தைக் கூறிய அனுமன் அவன் கருணைச் செயல்களையும் கூறலாயினன். கவந்தனை வென்ற இராமன் வீரமும், அக்கவந்தனுக்கு உயர் நிலை அளித்த அவன் கருணையும் இப்பாடலில் புலப்படுகின்றன. தவறு செய்த கவந்தனுக்கும், தவம் செய்த சவரிக்கும் ஒத்த நிலையில் அருள்புரிந்த இராமனின் பெருங்கருணையை அனுமன் விளக்கினான். கவந்தனின் சினத்தைத் தோள்மேல் ஏற்றிச் 'சினவு தோள்' என்றான். 'பிறப்பு அறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகை' என்றாற்போல முக்தி பெறுவதற்கு, அதற்குக் கருவியாயிருந்த உடம்பும் தேவையற்ற சுமையாவதால் 'உடற்பொறை' எனல் தகும். சவரி தவத்தால் பெற்ற உயர்பதத்தைக் கவந்தன் கொலைத் தொழில் புரிந்தும் பெற்றான் எனின், இராமன் கருணையை வியப்பதன்றி வேறு கூற இயலாது என்பதால் 'நமக்கு உரைசெயும் புரையவோ' என்றான். அக்கவந்தனும் - 'அ' முன்னறி சுட்டு, உம்மை - இழிவு சிறப்பும்மை. 12 |