3798. | 'முனைவரும் பிறரும், மேல், முடிவு அரும் பகல் எலாம், இனையர் வந்து உறுவர் என்று, இயல் தவம் புரிகுவார்; வினை எனும் சிறை துறந்து உயர் பதம் விரவினார் எனையர் என்று உரைசெய்கேன்? - இரவிதன் சிறுவனே! |
இரவிதன் சிறுவனே - சூரியனின் மைந்தனே!முனிவரும் பிறரும் - முனிவர்களும் மற்றவர்களும்; மேல் முடிவு அரும் பகல் எலாம் - முற்காலம் தொடங்கி எல்லையில்லாத பல நாட்களாக; இனையர் வந்து உறுவர் என்று - இராமலக்குவராகிய இவர்கள் இவ்வனத்திற்கு வருவர் என்பதை உணர்ந்து; இயல் தவம் புரிகுவார் - தத்தமக்கு இயன்ற வண்ணம் தவங்களைச் செய்பவர்களாய்; வினை எனும் சிறை துறந்து - (தவத்தின் பயனாய் இவர்களைக் காணப்பெற்று)இருவினை என்கின்ற கட்டினின்று நீங்கி; உயர்பதம் விரவினார் - உயர்ந்த வீடுபேற்றை அடைந்தார்கள்; எனையர் என்று - (அதனால்) இராமலக்குவரை எத்தன்மையர் என்று; உரை செய்கேன் - நான் சொல்ல வல்லேன்? (சொல்ல இயலாது) முனிவர் முதலியோர் இராமன் வருகைக்காகத் தவம் செய்து, கண்ட பின்னர் உயர்பதம் எய்தினர் என்பதால், இராமன் நல்லோரைக் காக்க வந்த முழு முதற்கடவுளே போலும் எனக் கூறினான் என்க. வீடுபேறு அடைவதற்கு நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் தடையாக இருத்தலால் 'வினை எனும் சிறை' எனப்பட்டது. 'இருள்சேர் இருவினையும் சேரா' (குறள் 5) என்றார் வள்ளுவரும். வினை நீங்கியதும் வீடுபேறு கிடைப்பது உறுதி ஆதலின் 'உயர்பதம் விரவினார்' என்றார். 'எனையர் என்று உரை செய்கேன்' என்பதற்கு இங்ஙனம் உயர்பதம் அடைந்தோர் எத்தனை பேர் என்று யான் எடுத்துரைப்பேன்' எனவும் பொருள் கொள்ளலாம். முனைவரும் பிறரும் - சரபங்கர், சவரி முதலியோர். ''நீ இவண் வருகுதி'' எனும் நினைவு உடையேன்; போயின இருவினை'' (2626) என்ற சரபங்கர் கூற்றை ஒப்புநோக்குக. இராமனோடு நட்புக்கொண்டால் புறப்பகையாகிய வாலியை அழிப்பதோடு, அகப்பகையாகிய குற்றங்களையும் நீக்கி உயர் பதம் அடையலாம் என உணர்த்தப்பட்டது. 13 |