3799. | 'மாயையால்,மதி இலா நிருதர்கோன், மனைவியைத் தீய கான் நெறியின் உய்த்தனன்; அவள் - தேடுவார், நீ, ஐயா, தவம் இழைத்து உடைமையால், நெடு மனம் தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார். |
ஐயா - தலைவனே! மதி இலா நிருதர் கோன் - அறிவில்லாத அரக்கர் தலைவனாகிய இராவணன்; மனைவியை - இந்த இராமனுடைய தேவியை; மாயையால் - வஞ்சனையால்; தீய கான் நெறியின் - கொடிய காட்டின் வழியிலே; உய்த்தனன் - கவர்ந்து சென்றான்; அவள் தேடுவார் - அவளைத் தேடுபவர்களாய் வந்த இராமலக்குவர்; நீ - நீ; தவம் இழைத்து உடைமையால் - முன் தவம் செய்திருத்தலாலும்; நெடுமனம் தூயையா உடையையால் - சிறந்த மனத்தில் தூய்மை உடையனாய் இருத்தலாலும்; உறவினை - உன்னொடு நட்புக் கொள்ள; துணிகுவார் - துணிவாராயினர். அனுமன், இராமலக்குவரின் வருகைக்குரிய காரணத்தை இங்குக் கூறினான். இராமனது வலிமையை அறியாமையாலும் பிறர் மனை விழைதல் தவறு என உணராமையாலும் 'மதியிலா நிருதர்கோன்' என்றான். மாய மானை அனுப்பியும், தவவேடத்தில் சென்றும் சீதையைக் கவர்ந்ததால் 'மாயையால்' என்றான். 'அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையாரில்' (குறள்-142) என்றார் வள்ளுவர். முனிவர்களை அரக்கர் வருத்திய இடமாய் இருத்தலால் கானம் 'தீயகான்' ஆயிற்று. இராமன் சுக்கிரீவனை நாடி வந்தது, அவன் முன் செய்த தவப்பயனாலும, அவனுடைய மனத்தூய்மையாலுமே ஆகும். 'பொய்யுடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ' (4092) என வாலியும், 'அடியேன் அருந்தவத்தால் அணுகுதலால் (2576) என விராதனும், 'ஆயிரம் முகம் உள தவம் அயர்குவென், யான்' (2626) எனச் சரபங்கரும் இராமனை நோக்கிக் கூறியவற்றால் மனத்தூய்மை உடையாரே இராமனைக் காண்பர் என்பது தெரியலாகும். சீதையைத் தேடுகின்றவர்கள் வழியில் சுக்கிரீவனைக் கண்டு உறவு கொள்ள நினைத்தார் என்பதால் இராமலக்குவருக்குச் சுக்கிரீவன் துணையின்றியும் வெற்றிபெற முடியும் என்பதையும் உணர்த்தினான். இங்ஙனம் அனுமான் இராமன் வரலாற்றைக் கூறியதில் அவனது சொல்வன்மையும் அறிவாற்றலும், எதிரது நோக்கும் நுண்ணறிவும் புலனாவதைக்காணலாம். 14 |