சுக்கிரீவன் இராமனை வந்து காணுதல் 3801. | அன்னஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான், 'உன்னையே உடைய எற்கு அரியது எப் பொருள் அரோ? பொன்னையே பொருவுவாய்! போது' என, போதுவான், தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான். |
அன்ன ஆம் உரை எலாம் - (அனுமான் கூறிய) அத்தன்மையன வாகிய சொற்களை எல்லாம்; அறிவினால் உணர்குவான் - தன் அறிவால் அறிந்துணர்ந்த சுக்கிரீவன்; பொன்னையே பொருவுவாய் - (அனுமனை நோக்கி) 'பொன் போன்றவனே'; உன்னையே உடைய எற்கு - அறிவில் சிறந்த உன்னையே துணையாக உடைய எனக்கு; அரியது எப்பொருள் - எந்தச் செயல்தான் அரியது?போது - வருவாயாக; எனப் போதுவான் - என்று புறப்பட்டவனாய்; தன்னையே அனையவன் - (தனக்கு வேறு எவரும் ஒப்பில்லாமையால்) தன்னையே ஒப்பவனாகிய இராமனுடைய; சரணம் வந்து அணுகினான் - திருவடிகளை வந்தடைந்தான். அனுமன் கூறியதற்கு இசைந்து அவனையும் அழைத்துக்கொண்டு இராமன் இருக்கும் இடத்தைச் சுக்கிரீவன் அடைந்தான். அறிவுடைய அனுமனை அமைச்சனாகப் பெற்ற சுக்கிரீவனுக்கு அரிய செயல் இல்லையாதலின் 'அரியது எப்பொருள்' என்றான். பொன்னையே பொருவுவாய் - அருமை, பெருமை, நயம், ஒளி என்ற சிறப்புகளால் பொன் உயர்வுள்ளதால் அனுமனுக்குப் பொன் உவமை ஆயிற்று. 'பொன் உருக்கொண்ட மேரு' (3781) என அனுமன் குறிக்கப்பட்டது காண்க. 'பொன்னையே பொருவுவாய்' என்பதற்குத் தேவேந்திரனுக்குக் குருவும் அமைச்சனுமாகிய பிரகஸ்பதி போன்றவனே எனப் பொருள் கொள்ளுதலும் தகும். பெரியோரை அடைந்தான் என்னும் பொருளில் திருவடிகளை அடைந்தான் என்பது மரபு. இராமனைச் சரண் அடைந்தான் என்ற குறிப்பும்புலனாகிறது. 16 |