அறுசீர் ஆசிரிய விருத்தம் 3802. | கண்டனன்என்ப மன்னோ - கதிரவன் சிறுவன், காமர் குண்டலம்துறந்த கோல வதனமும், குளிர்க்கும் கண்ணும், புண்டரிகங்கள் பூத்துப் புயல் தழீஇப் பொலிந்த திங்கள் மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரி அனானை. |
கதிரவன் சிறுவன் - சூரியன் மகனான சுக்கிரீவன்; காமர் குண்டலம் துறந்த - அழகிய குண்டலங்களை நீக்கிய; கோல வதனமும் - அழகிய முகமும்; குளிர்க்கும் கண்ணும் - (கருணையால்) குளிர்ந்து நோக்கும் கண்ணும்; புண்டரிகங்கள் பூத்து - தாமரை மலர்கள் மலரப் பெற்று; புயல் தழீஇ - கருமேகம் தழுவப்பெற்று; பொலிந்த திங்கள் மண்டலம் - விளங்குகின்ற சந்திர மண்டலம்; உதயம் செய்த - உதிக்கப் பெற்ற; மரகதக் கிளி அனானை - மரகத மலையை ஒத்தவனான இராமனைக்; கண்டனன் - கண்டான். தாமரை மலர்கள் - கை, கால் முதலிய உறுப்புகளுக்கும், புயல் கரிய முடிக்கும் - திங்கள் மண்டலம் - முகத்திற்கும், மரகதக்கிரி - நீலமேனிக்கும் உவமை. தாமரை பூத்து, மேகம் தழுவிய சந்திர மண்டலம் உதயம் செய்யும் மரகத மலையாண்டும் இன்மையால் இல் பொருள் உவமை அணியாயிற்று. தவ வேடம் மேற்கொண்டமையால் குண்டலம் துறந்த வதனமாயிற்று. எனினும், அழகு குறையாமையால் கோல வதனமாயிற்று. ''கருமுகில் தாமரைக் காடு பூத்து'' (191), 'திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனை'' (சிலம்பு - ஆய்ச்சியர் குரவை) என்பன இராமன் அழகை உணர்த்துவன. இத்தகைய அழகனைக் கண்ட வியப்பால் 'கண்டனன் என்ப, மன், ஓ எனப் பல அசைச் சொற்கள் பெற்று வந்தது இப்பாடல், இராமபிரான் திருக்கோலத்தை நினைந்து ஆழ்வார்கள்போல் கம்பர் பக்திச் சுவை ததும்பப் பாடியதுஇப்பாட்டு. 17 |