3804. | தேறினன்- 'அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே, மாறி, இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ; ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது' அன்றே! |
அமரர்க்கு எல்லாம் - தேவர்களுக்கு எல்லாம்; தேவர் ஆம் தேவர்- கடவுளாகிய முதற்கடவுளே (திருமாலே); மாறி- தம் உருவம் மாறி; இப்பிறப்பில் - இந்தப் பிறவியை எடுத்து; மானிடர் ஆகி வந்தார் - மானிடராக வந்துள்ளார்; ஆறுகொள் சடிலத்தானும் - (அதனால்) கங்கையைச் சடையில் கொண்ட சிவபிரானும்; அயனும் - நான்முகனும்; என்று இவர்கள் ஆதி - என்று இவர்கள் முதலாக; வேறு உள குழுவை எல்லாம்- வெவ்வேறாக உள்ள தேவர் கூட்டத்தையெல்லாம்; மானுடம் வென்றது - மனித குலம் வென்றுவிட்டது; அன்றே - அல்லவா? தேறினன்- என்று தெளிந்தான். தேவர்களுக்குள் முதல்வனான திருமாலே மானிடனாகப் பிறந்துவிட்டதால் பிரமன் முதலான தேவர்கூட்டத்தை மானுடன் வென்றதாகக் கூறினான். திருமால் இராமனாகவும் ஆதிசேடன் இலக்குவனாகவும் பிறந்தார் என்பதைத் 'திரு அவதாரப்படலத்தில் காணலாம். அமரர்க்கெல்லாம் தேவராம் தேவர் திருமால் என்பதை 'முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ணம்' (முதல் திருவந்தாதி 15) என்ற பொய்கையாழ்வார் பாசுரம் உணர்த்தும். இராமன் மனிதனாகப் பிறந்ததால் மனித குலத்திற்கு பெருமை உண்டாயிற்று என்பது கருத்தாகும். பெருமானைக் கண்ட அளவிலேயே உணர்வின் எல்லை கடந்த பக்தி வயப்பட்ட சுக்கிரீவன் அனுபவத்தினை அனுமன் கண்ணப்பர் ஆகியோர் அனுபவத்தோடு ஒப்பிட்டு உணர்தல் நலம். 19 |