இராமன் சுக்கிரீவனை வரவேற்றல் 3805. | என நினைந்து,இனைய எண்ணி, இவர்கின்ற காதல் ஓதக் கனை கடல் கரைநின்று ஏறா, கண் இணை களிப்ப நோக்கி, அனகனைக் குறுகினான்; அவ் அண்ணலும், அருத்தி கூர, புனை மலர்த் தடக்கை நீட்டி, 'போந்து இனிது இருத்தி' என்றான். |
என இனைய நினைந்து - (சுக்கிரீவன்) என்று இத்தன்மையானவற்றை ஆலோசித்து; எண்ணி - -; இவர்கின்ற- மேன்மேலும் பெருகுகின்ற; காதல்- அன்பாகிய; ஓதக்கனை கடல் நின்று - வெள்ளத்தை உடைய ஒலிக்கின்ற கடலினின்றும்; கரை ஏறா - கரை ஏறாமல்; கண் இணை - கண்கள் இரண்டும்; களிப்ப நோக்கி- பெரு மகிழ்ச்சி அடையுமாறு பார்த்து; அனகனை - குற்றமற்றவனான இராமனை; குறுகினான் - அணுகினான்; அவ் அண்ணலும் - அந்தப் பெருமை பொருந்திய இராமனும்; அருத்தி கூர - அன்பு மிக; புனை மலர்த் தடக்கை நீட்டி- அழகிய தாமரை மலர் போன்ற பெரிய கைகளை நீட்டி; போந்து - 'இங்குவந்து; இனிது இருத்தி - இனிதாக இருப்பாய்'; என்றான் - என்று உபசரித்தான். சுக்கிரீவன் இராமனை மிக்க அன்போடு அணுக. இராமனும் சுக்கிரீவனைக் கருணையுடன் வரவேற்று உபசரித்தான் என்க. இங்கு இருத்தி என்று காட்ட இராமன் கைநீட்டினான், இஃது உபசாரக் குறிப்பு. அச்சம் இன்றி இருக்கலாம் என்பதால் 'இனிது இருத்தி' என்றான். காதல் ஓதக் கனை கடல் - உருவகம்; அனகன் - குற்றமற்றவன்; இராமன்; அருத்தி - ஆசை. வாலியை மறைவிடத்திலிருந்து கொல்லப்போகும் பெருமானைக் 'குற்றமற்றவன்' என்று இங்கேயே கூறத் தொடங்கும் கவிஞர் கருத்தினைஓர்க. 20 |