3806.தவாவலி அரக்கர் என்னும்
     தகா இருள் பகையைத் தள்ளி,
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற
     காலத்தின் கூட்டம் ஒத்தார்;
அவா முதல் அறுத்த சிந்தை
     அனகனும், அரியின் வேந்தும்,
உவா உற வந்து கூடும்,
     உடுபதி, இரவி, ஒத்தார்.

     அவாமுதல் அறுத்த- ஆசையை வேரோடு களைந்த; சிந்தை
அனகனும் -
மனத்தையுடைய குற்றமற்றவனாகிய இராமனும்; அரியின்
வேந்தும் -
குரங்கினத்து அரசனாகிய சுக்கிரீவனும் (ஒன்று கூடியவராய்);
தவா வலி அரக்கர் என்னும்
- அழியாத வலிமையை உடைய அரக்கர்
என்கின்ற; தகா இருள் பகையை - தகுதியில்லாத இருளாகிய பகைவர்களை;
தள்ளி -
ஒழித்து; குவால் அறம் நிறுத்தற்கு - பலவகைப்பட்ட அறங்களை
நிலைபெறச் செய்வதற்கு; ஏற்ற காலத்தின் - தக்காய் வந்த காலத்தின்;
கூட்டம் ஒத்தார் -
சேர்க்கையை ஒத்திருந்தார்கள்; உவா உற - (மேலும்
அவர்கள்) அமாவாசை நேர; வந்து கூடும் - ஒன்றாக வந்து சேர்கின்ற;
உடுபதி இரவி -
சந்திரனையும் சூரியனையும்; ஒத்தார் - ஒத்து விளங்கினர்.

     முதல் - வேரினைக் குறிக்கும்.  நீங்குதற்கரிய ஆசைகளை
வென்றவனாதலின் இராமபிரானை 'அவா முதல் அறுத்த சிந்தை அனகன்'
என்றார்.  'மெய்த்திருப்பதம் மேவென்றபோதினும், 'இத்திரு துறுந்து ஏகு'
என்ற போதினும், சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை யொத்திருக்கும்
முகத்தன் (5088) என்ற அடிகள் இராமனது பற்றற்ற தன்மையை உணர்த்தும்.
'அவா முதல் அறுத்த' என்பதற்குக் காமம் முதலிய குற்றங்களைப் போக்கிய'
எனவும் பொருள் கொள்ளலாம்.  சுக்கிரீவன் அரசன் ஆவது உறுதி ஆதலின்
'அரியின் வேந்து' என்றார்.

     அரக்கர் என்னும் இருட்பகையைத் தள்ளுதற்குரிய காலமும், அறத்தை
நிலை நாட்டுதற்குரிய காலமும் இணைந்தது போலச் சுக்கிரீவனும் இராமனும்
ஒன்று சேர்ந்தனர். சுக்கிரீவன், இராமன் சேர்ந்த நட்பு இராவணன் முதலிய
அரக்கர்கள் அழிவிற்கும் அறம் நிலைபெறுவதற்கும் மூலகாரணமாய்
முடிதலால் 'தவா வலி . . . . காலத்தின் கூட்டம் ஒத்தார்' என்றார். அறங்கள்
பலவாக இருப்பதால் 'குவால் அறம்' என்றார். குவால் - தொகுதி. அமாவாசை
- சூரியனும் சந்திரனும் கூடி உறைவது என்ற பொருள் உடையது; 'இந்துவோடு
இரவு கூட்டம் அமாவாசையும் என்ப' (சூடா.நிகண்டு.1-85). இரவி - சூரியன்;
இங்கு இராமனுக்கு உவமை.  'கரு நாயிறு போல்பவர்' (1163) என்றனள் சீதை.
'இருளுடைவைகலெம் இரவி தோன்றினாய்' (2646) எனத் தண்டகவனத்து
முனிவர் இராமனைச் சூரியனாகக் கூறினர். உடுபதி - சந்திரன். குரங்குகளை
நட்சத்திரங்களாகவும், சுக்கிரீவனை நட்சத்திரக் கூட்டத் தலைவன்
சந்திரனாகவும் கொள்க.  தன் கலைகளை இழந்த சந்திரன் சூரியனை
அடைந்து அவனால் கலைகளாகிய ஒளி வளரப்பெறுவது போல, சுக்கிரீவனும்
இராமபிரானை அடைந்ததால் அரசியல் செல்வம் முதலிய நலன்கள் பெறுவது
உறுதியாதலின் 'உவா வுற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார்' என்றார்.
வெண்ணிறத்தாலும் சந்திரனுக்குச் சுக்கிரீவன் ஒப்பாவான்.  'அரியின் வேந்தும்
அனகனும் உடுபதி இரவி ஒத்தார்' என மாற்றிப் பொருள் காண்க.

     இராம சுக்கிரீவர் நட்பைக் காலத்தின் சேர்க்கையாகத்
தத்துவப்படுத்தியும், சூரிய சந்திர சேர்க்கையாகக் காட்சிப் பொருளாக்கியும்
கம்பர் காட்டியுள்ள நயம் சிறப்புடையது.  இஃது உவமை அணி பொருந்திய
பாடல். முதல் இரண்டு அடிகளில், அரக்கரை இருளாக உருவகித்ததற்கு ஏற்ப,
அறத்தை வெளிச்சமாக உருவகம் செய்யப் பெறாமையால் ஏகதேச உருவக
அணி, உவமை அணிக்கு அங்கமாய் நின்றது என்க.                   21