3807.கூட்டம்உற்று இருந்த வீரர்,
     குறித்தது ஓர் பொருட்கு முன்நாள்
ஈட்டியதவமும், பின்னர்
     முயற்சியும் இயைந்தது ஒத்தார்;
மீட்டும், வாள் அரக்கர் என்னும்
     தீவினை வேரின் வாங்க,
கேட்டு உணர் கல்வியோடு
     ஞானமும் கிடைத்தது ஒத்தார்.

     கூட்டம் உற்ற இருந்த வீரர் - நட்பாய் ஒன்றிக் கூடியிருந்த இராம
சுக்கிரீவர்; குறித்தது ஓர் பொருட்கு - குறிப்பிட்டு நினைத்த காரியம்
நிறைவேறுவதற்கு; முன்நாள் ஈட்டிய தவமும்- முற் பிறப்பில் செய்து தேடிக்
கொண்ட தவமும்; பின்னர் முயற்சியும்- பின்பு (இப்பிறப்பில் தவப்பயனை
அடைய) எடுத்துக் கொள்ளும் முயற்சியும்; இயைந்தது ஒத்தார் - ஒன்று
சேர்ந்ததை ஒப்பவர் ஆனார்; மீட்டும் - மேலும்; வாள் அரக்கர் என்னும்
தீவினை -
கொடிய அரக்கர்கள் என்னும் தீவினையை; வேரின் வாங்க -
வேரோடு அழிக்க; கேட்டு உணர் கல்வியோடு - ஆசிரியர்பால் கேட்டு
அறிந்த கல்வியோடு; ஞானமும்- தத்துவ ஞானமும்; கிடைத்தது ஒத்தார் -
வந்து கூடியதை ஒத்தவரானார்.

     இராமனும் சுக்கிரீவனும் சேர்ந்திருந்த தோற்றத்திற்கு அழகிய இரண்டு
கருத்துவமைகள் இப்பாடலில் உள்ளன.  குறித்த பொருளை அடைவதற்கு
முன்னர்ச் செய்த தவமும், இப்பொழுது மேற்கொள்ளும் முயற்சியும் ஒன்று
கூடிப் பயன் தருவது போலவும், கல்வியும் ஞானமும் கூடிய வழித் தீவினை
ஒழிதல் போலவும் இராம சுக்கிரீவர் நட்பால் அரக்கர் அழிவு நடைபெறும்
என்பது கருத்தாகும்.  'ஆகூழால் தோன்றும் அசைவின்மை'.  (குறள் - 371)
என்பதால் 'ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும்' என அமைத்தார். பல்காலும்
கேட்டு அறிய வேண்டுதலின் 'கேட்டு உணர் கல்வி' என்றார்.

     'தவமும் முயற்சியும்' முறையே அனகனுக்கும் அரியின் வேந்தனுக்கும்
நேர் நிரல்நிறையாகவும், ''கல்வியும் ஞானமும்'' என்பதனை எதிர்நிரல்
நிறையாகவும் கொள்க.                                          22