சுக்கிரீவன் - இராமன் உரையாடல் 3808. | ஆயது ஒர் அவதியின் கண், அருக்கன் சேய், அரசை நோக்கி, 'தீவினை தீய நோற்றார் என்னின் யார்? செல்வ! நின்னை, நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை, மேயினென்; விதியே நல்கின், மேவல் ஆகாது ஏன்'? என்றான். |
ஆயது ஓர் அவதியின்கண் - அவ்வாறு ஒருங்கு கூடியிருந்த சமயத்தில்; அருக்கன் சேய் - சூரியன் மகனான சுக்கிரீவன்; அரசை நோக்கி - இராானைப் பார்த்து; செல்வ - ''எல்லாச் செல்வமும் உடையவனே! உலகுக்கு எல்லாம் - உலகம் அனைத்திற்கும்; நாயகம் என்னல் ஆம் - தலைமையான பொருள் என்று சொல்லுதற்கு ஏற்ற; நலம் மிக்கோயை - நல்ல குணங்களை உடையவனான; நின்னை - உன்னை; மேயினென் - யான் வந்து சேர்ந்தேன்; தீவினை தீய நோற்றார்- (எனவே) தீவினை ஒழியுமாறு தவம் செய்தவர்கள்; என்னின் யார்? - என்னைக் காட்டிலும் யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இலர்); விதியே நல்கின் - ஊழ்வினையே இவ்வாறு கூட்டி அருளுமாயின்; மேவல் ஆகாது என் - அடைய முடியாதது யாதுளது? (ஒன்றுமில்லை). சுக்கிரீவன் இராமனை அடைந்தது, தான் முன் பிறவியில் செய்த நல்வினையாலும், ஊழின் செயலாலுமாம் எனக் கூறினான். தீவினை நீங்கத் தவம் செய்தார்க்கு அன்றி இராமனை அடைய முடியாது என்பதால் ''தீவினை தீய நோற்றார் என்னின் யார்?'' என்றான். நல்லூழ் தனக்கு அப்பேற்றை நல்கியது எனக் கூறுவான். அதைப் பொதுப் பொருளாக்கி 'விதியே நல்கின் மேவல் ஆகாது என்?' என்றான். இது வேற்றுமைப் பொருள் வைப்பு அணி. 'புண்ணியம் பயக்கின்றுழி அரியது எப்பொருளே' (3681) என்ற அடியை ஒப்பு நோக்குக. 'ஆகாதது என்ற சொல் செய்யுள் நோக்கி ஆகாது என நின்றது. 23 |