3809. | 'மைஅறு தவத்தின் வந்த சவரி, இம் மலையில் நீ வந்து எய்தினை இருந்த தன்மை, இயம்பினள்; யாங்கள் உற்ற கை அறு துயரம், நின்னால் கடப்பது கருதி வந்தேம்; ஐய! நின் தீரும்' என்ன, அரிக்குலத்து அரசன் சொல்வான்; |
ஐய - (இராமன் சுக்கிரீவனை நோக்கி) ஐயனே! மை அறு தவத் தின்வந்த - குற்றமற்ற தவமுடையவளாய் வந்த; சவரி - சவரியானவள்; இம்மலையில் நீ வந்து- இந்த ருசியமுக மலையில் நீ வந்து; எய்தினை இருந்த தன்மை- பொருந்தி இருந்த நிலையை; இயம்பினள் - சொன்னாள்; யாங்கள் உற்ற - நாங்கள் அடைந்துள்ள; கையறு துயரம் - செயலற்று வருந்தும் பெருந்துன்பத்தை; நின்னால் கடப்பது கருதி - உன்னால் நீக்குவதுகருதி; வந்தேம் - இங்கு வந்தோம்; நின் தீரும் - அத்துன்பம் உன்னாலேயேதீர்வதாகும்'; என்ன - என்று கூற (அதைக்கேட்ட); அரிக்குலத்து அரசன் - குரங்கினத்திற்கு அரசனாகிய சுக்கிரீவன்; சொல்வான் - சொல்லத்தொடங்கினான். சுக்கிரீவன் இருந்த மலையை அறிந்தது எவ்வாறு என்பதை அறிவிக்கச் 'சவரி . . . . இயம்பினள்' என்றான் இராமன். தான் வந்த காரணத்தையும் 'கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம்' என உரைத்தான். மை - குற்றம்; தவத்திற்குக் குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் இடை இடையே நிகழ்வது. 'வந்து எய்தினை இருந்த தன்மை' என்பதால் ருசியமுகமலை சுக்கிரீவனுக்கு உரிய மலையன்று என்பதும், வாலிக்கு அஞ்சியே அங்கே தங்கியிருந்தால் என்பதும் பெறப்படுகின்றன. 24 |